விழுப்புரம் நகரில் குப்பை அகற்றும் பணி தீவிரம்: அரியலுார் தொழிற்சாலைக்கு 260 டன் சப்ளை
விழுப்புரம் நகரில் குப்பை அகற்றும் பணி தீவிரம்: அரியலுார் தொழிற்சாலைக்கு 260 டன் சப்ளை
UPDATED : ஜூன் 20, 2026 12:38 PM
ADDED : ஜூன் 19, 2026 08:32 PM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி பகுதியில், குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரியலுார் சிமென்ட் தொழிற்சாலைக்கு தினமும் 25 டன் குப்பைகள் லாரி மூலம் அனுப்பப்படுகிறது.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் துாய்மைப் பணியாளர்களைக் கொண்டு தினமும் துப்புரவு பணிகள், மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக துாய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை துாய்மைப் பணியாளர்கள் மினி வேன்கள் மூலம் சேகரித்து, நகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நுண்ணுர மையங்களில் சேர்ப்பிக்கின்றனர்.
அங்கு, மக்கும் குப்பைகளை உரமாக்கும் நடவடிக்கை மேற்கொண்டு, உரங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும், மக்காத மற்றும் விலை போகாத குப்பைகளை, நகராட்சி வாகனங்கள் மூலம் தினமும், இக்கழிவுகள் சராசரியாக 25 டன் வரை, அரியலுார் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இம்மாதம், இதுவரை 260 டன் மக்காத குப்பைகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சி வாகனங்களுடன் கூடுதலாக ஒரு தனியார் வாகனம் மூலம். தினமும் 25 டன் வரை உலர்கழிவுகள், அரியலுார் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், நகராட்சியில் கசடு கழிவு மேலாண்மை பணியான கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு உரிய அரசு வழிகாட்டுதலுடன் உரிமம் வழங்குவதற்கும், நகராட்சி குப்பைக் கிடங்குகளில் கழிவுகளை கொட்டுவதற்கும் கட்டண விகிதம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
கூடுதல் பணியாளர்கள்,எந்திரங்கள் அவசியம்
விழுப்புரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், 350 துாய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில், பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால், பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து 200 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, விழுப்புரம் நகராட்சியில் ஒன்றரை லட்சம் பேர் வசித்து வந்தனர். தற்போது, விழுப்புரம் நகரில் பல்வேறு குடியிருப்புகள் அதிகரித்துள்ளது. நகராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருக்க வாய்ப்புள்ளது. இதனால், கூடுதல் துாய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கான கருத்துரு மாநில அரசுக்கு நகராட்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சாலையில் தேங்கியுள்ள மண் குவியலை அகற்றும் பணியை, நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மாற்றாக, சாலையில் மண் குவியல்களை அகற்றுவதற்கான எந்திரத்தை பயன்படுத்தினால், மனித சக்தி வேறு பணிக்கு பயன்படுத்த முடியும்.
