மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கை... நிறைவேறுமா?புதிய அரசிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கை... நிறைவேறுமா?புதிய அரசிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 21, 2026 04:46 PM
ADDED : ஜூன் 21, 2026 04:40 PM

உடுமலை: குடிநீர் வசதி, சோலார் தெருவிளக்கு பராமரிப்பு, புதிய குடியிருப்புகள் என பல்வேறு அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின கிராம மக்கள், புதிய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனசரகத்தில், 'செட்டில்மென்ட்' எனப்படும், 15 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இதில், 7 குடியிருப்பில், பழங்குடியினரும், 8 குடியிருப்பில், பிற சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். வனப்பகுதியில், பல தலைமுறைகளாக வசித்து வரும் மலைவாழ் கிராம மக்கள், பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தாகம் தீரவில்லை மலைத்தொடரில் உருவாகும் சிற்றாறுகளில் கிடைக்கும் தண்ணீரையே, அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். பல்வேறு காரணங்களால், குடியிருப்புக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. மேலும், மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ள சமவெளிப்பகுதியில், விவசாயம் செய்யவும், தண்ணீர் கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வருகின்றனர். குருமலை, குழிப்பட்டி, கோடந்துார், ஈசல்திட்டு உட்பட பல கிராம மக்கள், குடியிருப்புக்கு தனியாக குடிநீர் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேடான பகுதிகளிலிருந்து, குடியிருப்புக்கு தண்ணீர் கொண்டு வர அமைக்கப்பட்ட குழாய்களை யானைகள் சேதப்படுத்துவதால், தொடர் தட்டுப்பாடு அப்பகுதியில் நிலவுகிறது. வறட்சியால், சிற்றாறுகள் வற்றியுள்ள நிலையில், மலைப்பகுதியில், வசித்தும், தாகத்தில் தவிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இருளில் தவிப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் குடியிருப்புகளுக்கு, மின்வசதி ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்பதால், சோலார் பேனல்கள் மூலம், தெருவிளக்குகள் அரசால் அமைத்து தரப்பட்டன. இவை வழங்கப்பட்டு, பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால், பல மலைவாழ் கிராமங்கள் இருளில் மூழ்குவது தொடர்கதையாகியுள்ளது. வீடுகளுக்கு அளிக்கப்பட்ட, சோலார் பேனல்களும், பழுதடைந்துள்ளதால், மக்கள் தவிக்கின்றனர். இரவு நேரங்களில், உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக, வனவிலங்குகள் குடியிருப்புக்குள் வரும் போது, அவற்றை இருளில் எதிர்கொள்ள முடியாமல், பாதிக்கப்படுகின்றனர்.
வானமே கூரையாக... பல்வேறு மலைவாழ் குடியிருப்புகளில், பாரம்பரிய முறைப்படி, மண் சுவர் அமைத்து, மூங்கில் தடுப்புகளால், வீடு கட்டும் முறை வெகுவாக குறைந்துள்ளது. அரசால், கோடந்துார் உட்பட பகுதிகளில் கட்டி தரப்பட்ட வீடுகளும், பராமரிப்பின்றி, மழை மற்றும் வெயில் காலங்களில், அப்பகுதியினர் வேதனைக்குள்ளாகின்றனர். இதற்கு தீர்வாக, ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் பசுமை வீடு மற்றும் தொகுப்பு வீடு திட்டங்களில், வீடு கட்டி தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
