/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
20 ஆண்டுகளுக்கு திருப்பூர் ஏற்றுமதி பிரகாசம்: ஏ.இ.பி.சி. துணை தலைவர் சக்திவேல் நம்பிக்கை
/
20 ஆண்டுகளுக்கு திருப்பூர் ஏற்றுமதி பிரகாசம்: ஏ.இ.பி.சி. துணை தலைவர் சக்திவேல் நம்பிக்கை
20 ஆண்டுகளுக்கு திருப்பூர் ஏற்றுமதி பிரகாசம்: ஏ.இ.பி.சி. துணை தலைவர் சக்திவேல் நம்பிக்கை
20 ஆண்டுகளுக்கு திருப்பூர் ஏற்றுமதி பிரகாசம்: ஏ.இ.பி.சி. துணை தலைவர் சக்திவேல் நம்பிக்கை
ADDED : செப் 26, 2025 06:47 AM

திருப்பூர்: ''ஏற்றுமதியாளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் யார்னெக்ஸ் கண்காட்சி அமைந்துள்ளது. மேலும், 20 ஆண்டுகளுக்கு திருப்பூரின் ஏற்றுமதி பிரகாசமாக இருக்கும்'' என, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் நம்பிக்கை தெரிவித்தார்.
திருப்பூர் ஐ.கே.எப். வளாகத்தில் ஜவுளி தொழில் சார்ந்த யார்னெக்ஸ் மூன்று நாள் கண்காட்சி நேற்று துவங்கியது. இதை துவக்கி வைத்து பார்வையிட்ட ஏ.இ.பி.சி. துணை தலைவர் சக்திவேல் நிருபர்களிடம் கூறியதாவது:
இரண்டு நாள் முன் நடந்த ஏற்றுமதியாளர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் செயற்கையிழை மற்றும் நீடித்த நிலைத்தன்மை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
தற்போது துவங்கியுள்ள யார்னெக்ஸ் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளும், கண்காட்சியின் நோக்கமும் ஏற்றுமதியாளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
திருப்பூரில், 16வது ஆண்டாக வெற்றிகரமாக இக்கண்காட்சி நடக்கிறது. அனைத்து நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி குறித்த அரங்குகளை சிறப்பான முறையில், விளக்கமாக வடிவமைத்துள்ளன. பசுமை பாதுகாக்கும் விதமாகவும், வளம் குன்றா வளர்ச்சியை பின்பற்றும் வகையிலும் மூலப் பொருட்கள் ஜவுளி தொழில்துறைக்கும், இயற்கையை பாதுகாக்கும் விதமாகவும் உள்ளன.
திருப்பூரைப் பொறுத்தவரை தற்போது, 85 சதவீதம் பருத்தியும், 15 சதவீதம் செயற்கை நுாலிழைகளும் பயன்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு முதல் இது 70 மற்றும் 30 சதவீதமாக மாறும். ஸ்போர்ட்ஸ் மற்றும் லாஞ்ச் வேர் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டு ஆடைகளும் அதிகளவில் உற்பத்தியாகும். ஏற்றுமதி வர்த்தகத்தைப் பொறுத்தவரை பிரிட்டன் வரியில்லா ஒப்பந்தம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இதுதவிர, 27 ஐரோப்பிய நாடுகளும் நம்முடன் வர்த்தகத்தில் இணையவுள்ளன. திருப்பூரைப் பொறுத்த வரை மேலும் 20 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகம் மிகப் பிரகாசமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அருமையான வாய்ப்பு
இக்கண்காட்சியில் காட்டன் உற்பத்தி முதல் கார்ப்ரேட் நிறுவனங்கள் வரை அரங்கு அமைத்துள்ளன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், ஏழு வெளிநாட்டு நிறுவனங்களும் இங்கு அரங்கு அமைத்துள்ளன. ஆரம்பம் முதல் ஆடை உற்பத்தி வரை அனைத்து தரப்பு நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. ஜவுளி தொழில் முனைவோர்க்கு வாய்ப்பு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. கண்காட்சியைப் பார்வையிட பல மாநிலங்களிலிருந்தும் தொழில் துறையினர் வருகை தரவுள்ளனர். கடந்தாண்டு, 8 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். நடப்பாண்டு, 10 ஆயிரம் பேர் பார்வையிடுவர். - கிருஷ்ணமூர்த்தி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்