/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; சட்டசபையில் விவாதிக்க எதிர்பார்ப்பு
/
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; சட்டசபையில் விவாதிக்க எதிர்பார்ப்பு
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; சட்டசபையில் விவாதிக்க எதிர்பார்ப்பு
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; சட்டசபையில் விவாதிக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 24, 2025 12:17 AM

திருப்பூர்; அடுத்த மாதம் நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில், திருப்பூர் மாநகராட்சி குப்பை விவகாரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, 60 வார்டுகளில் தினமும், 800 மெட்ரிக் டன் அளவு குப்பை சேகரமாகிறது. பல்வேறு கலவையான குப்பை கழிவுகள், பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்படுகிறது. அவ்வகையில், தற்போது முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, சட்டசபையில், இது குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்டப்பிரிவு செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:
பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கையை துவங்கியுள்ளோம். இதனால், ஒரு நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும், அக்., 14ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் துவங்கவுள்ளது.
இதில், பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சியின் குப்பை பிரச்னை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். நாட்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் திருப்பூருக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி திட்டங்கள் ஏற்படுத்தி விரைவில் அதை செயல்படுத்த வேண்டும்.
சர்வதேச அளவில் பசுமையைக் கொண்டாடும் நாடுகளுக்கு 'பசுமை டேக்' கொண்ட ஆடைகளை ஏற்றுமதி செய்யும் திருப்பூர், இயற்கையை பாதுகாக்கும் வகையிலும் இருக்க வேண்டும். இங்கு சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் சுற்றுப்பகுதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்புக்கும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.