/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எத்தியோபியா குழுவினர் 'நிப்ட்-டீ' கல்லுாரிக்கு... பாராட்டு மழை!
/
எத்தியோபியா குழுவினர் 'நிப்ட்-டீ' கல்லுாரிக்கு... பாராட்டு மழை!
எத்தியோபியா குழுவினர் 'நிப்ட்-டீ' கல்லுாரிக்கு... பாராட்டு மழை!
எத்தியோபியா குழுவினர் 'நிப்ட்-டீ' கல்லுாரிக்கு... பாராட்டு மழை!
UPDATED : செப் 28, 2025 09:05 AM
ADDED : செப் 27, 2025 11:35 PM

திருப்பூர் : பின்னலாடை தொழில்நுட்ப பகிர்வுக்காக, எத்தியோபியா அரசு பிரதிநிதிகள் 16 பேர் அடங்கிய குழு, நேற்று 'நிப்ட்-டீ' கல்லுாரியில் கலந்துரையாடியது. அதில், 'பேஷன் டிசைனிங்' தொடர்பாக கேட்டறிந்து, வியந்து பாராட்டினர்.
எத்தியோபியாவின், ஜவுளித்துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் குழு, இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. ஜவுளி, பின்னலாடை உற்பத்தி, விசைத்தறி, நுாற்பாலை தொழில்பிரிவுகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டாக இணைந்து நடத்தும், முதலிபாளையம் 'நிப்ட் - டீ' கல்லுாரிக்கு நேற்று வருகை தந்தனர். ஆயத்த ஆடை டிசைனிங் தொடர்பாக, ஒவ்வொருதுறை ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.
ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சி, கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை ஆற்றல் குறித்தும் வியந்து பாராட்டினர். தொடர்ந்து, கல்லுாரி வளாகத்தில் இயங்கி வரும், 'அடல் இன்குபேசன்' மையத்தை பார்வையிட்டு, மத்திய அரசு புத்தாக்க தொழில்களை ஊக்குவித்து வருவது குறித்தும் கேட்டறிந்தனர். இதுதவிர, திருப்பூர் பனியன் தொழிலின் வரலாறு, 'நிட்டிங்' துவங்கி, 'பேக்கிங்' வரையிலான தொழில்பிரிவுகளின் பங்களிப்பு குறித்தும் கேட்டறிந்தனர். உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி மற்றும் வர்த்தகம், ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தனர். கல்லுாரி 'டீன்' சம்பத், பேராசிரியர் குமார், ஆசிரியர் முருகன் உள்ளிட்டோர், கல்லுாரி செயல்பாடுகள் மற்றும் 'பேஷன் டிசைனிங்' குறித்து விளக்கினர்.
கல்லுாரி 'டீன்' சம்பத் கூறியதாவது:
எத்தியோபியாவில், ஜவுளித்துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த, 16 அரசுத்துறை பிரதிநிதிகள் குழு, கல்லுாரிக்கு வந்திருந்தது. 'நிப்ட்-டீ' கல்லுாரியில் அளிக்கப்படும், 'பேஷன் டிசைனிங்' பயிற்சி தொடர்பாக கேட்டறிந்து வியந்து, பாராட்டினர்.
வருங்காலத்தில், இதேபோல், 'பேஷன் டிசைனிங்' பயிற்சி பெற ஏதுவாக, விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யலாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
விரைவில், எத்தியோபியா அதிகாரிகள் குழு திருப்பூர் வந்து, ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதன் வாயிலாக, எத்தியோபியாவில், ஆறு மாதமும், திருப்பூரில் ஆறு மாதமும் தொழிற்பயிற்சியும், பேஷன் டிசைனிங் பயிற்சியும் பெறவும் திட்டமிட்டுள்ளனர். 'அடல் இன்குபேஷன்' மையத்தை பார்வையிட்டு, புத்தாக்க தொழில்களை ஊக்குவிப்பது குறித்தும் வியந்து பாராட்டியுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.