ADDED : ஜூன் 13, 2025 11:37 PM
திருப்பூர்; அரசு பள்ளிகளில், கடந்த கல்வியாண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, மே மாதத்தில் நடைபெற வேண்டிய பணி நிரவல் கலந்தாய்வு, இதுவரை நடத்தப்படவில்லை.
கலந்தாய்வு தள்ளி போனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், கலந்தாய்வை எந்தவித தாமதமும் இன்றி, உடனடியாக நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், “டெட், செட் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளை காரணமாகக் காட்டி, ஆசிரியர் பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன. பட்டதாரி ஆசிரியரில் இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியராக உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியரிலிருந்து தலைமையாசிரியர் பதவி உயர்வுகள் உள்ளிட்டவை, நான்கு ஐந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது கல்வி சார்ந்த முக்கிய விஷயமாக இருப்பதால், பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வுகள் விரைவாக நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.