/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே சுரங்க பாலங்களில் மேற்கூரை அமைக்கும் திட்டம் பாதியில் நிற்பதால் மழை நீர் தேக்கம்
/
ரயில்வே சுரங்க பாலங்களில் மேற்கூரை அமைக்கும் திட்டம் பாதியில் நிற்பதால் மழை நீர் தேக்கம்
ரயில்வே சுரங்க பாலங்களில் மேற்கூரை அமைக்கும் திட்டம் பாதியில் நிற்பதால் மழை நீர் தேக்கம்
ரயில்வே சுரங்க பாலங்களில் மேற்கூரை அமைக்கும் திட்டம் பாதியில் நிற்பதால் மழை நீர் தேக்கம்
ADDED : அக் 20, 2025 11:39 PM

உடுமலை: ரயில்வே சுரங்கப்பாதைகளின் இருபுறத்திலும், மேற்கூரை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மழை நீர் தேங்குகிறது.
திண்டுக்கல் - - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகளின் போது, உடுமலை பகுதிகளில், மருள்பட்டி, பெரியார் நகர், தளி ரோடு, எம்.பி.,நகர், சடையபாளையம்,அந்தியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தண்டவாளத்தை கடக்கும் வகையில், ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. கிராமங்களின் முக்கிய வழித்தடத்தில் அமைந்த இந்த சுரங்கப்பாதைகளில், மழை நீர் வெளியேற போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், மழைக்காலத்தில், சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி, அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
உடுமலை தளி ரோடு ரயில்வே சுரங்க பாலம், பாலப்பம்பட்டி- மருள்பட்டி ரோடு, பெரியார் நகர், ராகல்பாவி இணைப்பு ரோடு உள்ளிட்ட பல இடங்களில், இப்பிரச்னை நிரந்தரமாக உள்ளது. சுரங்க பாதைகளில் தேங்கும் மழை நீரை, கிணறுகளில் சேமித்து, மின் மோட்டார் வாயிலாக வெளியேற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஒரு சில இடங்களில் மட்டும், இந்த கட்டமைப்பு அமைக்கப்பட்ட நிலையில், மழை நீர் சேகரிப்பு கிணற்றில் மண் மூடியது, மின் மோட்டார்களை இயக்குவதில் அரசு துறை அதிகாரிகள் அலட்சியம், மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களினால், மழை நீர் தேங்குவதும், அதனுடன் கழிவு நீரும் தேங்குவதும் நிரந்தரமாக உள்ளது.
மழை காலங்களில், மாதக்கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ரயில்வே சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், ரயில்வே சுரங்க பாலங்களின் இருபுறமும், மேற்கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேற்கூரை அமைக்கும் போது, மழைநீர் சுரங்கபாதைக்கு செல்லாது. ஓடுதளத்தில் வடிந்து வரும் நீரும் சுரங்கபாதையினுள் செல்லாதவாறு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்படும்.
இதற்காக, மேற்கூரைகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு, கம்பிகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெறாமல், பல மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், ரயில்வே சுரங்க பாலங்களில், மழை நீர் தேங்குகிறது. எனவே, மேற்கூரை அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.