/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 280 பேர் கைது
/
பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 280 பேர் கைது
பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 280 பேர் கைது
பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 280 பேர் கைது
ADDED : செப் 02, 2025 11:23 PM

திருப்பூர்: முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் தற்போது, முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொண்டு ெசன்று கொட்டப்படுகிறது.
பல்வேறு பகுதிகளில் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின் கடந்த வாரம் முதல் இந்த பாறைக்குழி தேர்வு செய்யப்பட்டு தற்போது குப்பைகள் அங்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த பாறைக்குழியில் குப்பை கொட்டுவதால் தங்கள் பகுதிக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று முதலிபாளையம் சுற்றுப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள், காங்கயம் ரோடு, புதுப்பாளையம் பிரிவில் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் காங்கயம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் மறியலில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினர்.
ஆனால், மறியலை கைவிட மக்கள் மறுத்த நிலையில், போலீசார் குண்டு கட்டாகத் துாக்கி வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதில் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டு கைதான பொதுமக்களை பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன், திருமண மண்டபத்துக்கு சென்று சந்தித்து பேசினார்.
உள்ளிருப்பு போராட்டம்; வெளியேற்ற முயற்சி பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து முத்தணம்பாளையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின், மாலையில் அனைவரையும் விடுவித்தனர். ஆனால், வெளியேற மறுத்து, உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கட்ட பேச்சு நடத்தியும் மக்கள் வெளியேற மறுத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை வலுகட்டயமாக வெளியேற்ற முயன்ற போது, போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பேச்சு நடத்த மேயர் தினேஷ்குமார் நேரில் வர வேண்டும் என்று மக்கள் கூறியதால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கள நிலவரத்தை அறிந்து, மேயர் செல்லவில்லை.
மேலும், கைது செய்யப்பட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக, தகவலறிந்து சென்ற பொதுமக்கள் மண்டபத்துக்கு வெளியே மறியலில் ஈடுபட்டனர். இதனால், நேற்று இரவு, 10:00 மணியை தொடர்ந்தும், இப்பிரச்னை முடிவுக்கு வரவில்லை.