ADDED : செப் 26, 2025 06:35 AM

திருப்பூர்; வடகிழக்கு பருவம் துவங்கும் நிலையில், எவ்வித பாதிப்பும் இன்றி, கடந்து செல்வதற்கான முன்னேற்பாடுகளை, திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை மேற்கொண்டுவருகிறது.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர்கள் தீபா சத்யன், பிரவீன் கவுதம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி உட்பட பல துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க, 52 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில், வரும் அக். 1ம் தேதி முதல், 24 மணி நேரமும் செயல்படும் வெள்ள கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது.
திருமூர்த்தி அணை, அமராவதி, உப்பாறு அணைகளுக்கு நீர் வரத்து, அணையின் நீர்மட்டம், நீர் வெளியேற்றம், அணையின் கொள்ளளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். அணையிலிருந்து உபரிநீர் வெளியேறும்போது, கரையோர மக்களுக்கு, முன்னரே எச்சரிக்கை அறிவிப்புகள் தெரிவிக்க வேண்டும். பேரிடரின் போது, பொது கட்டடங்கள், முகாம்களாக பயன்படுத்த தகுதியான நிலையில் உள்ளனவா என ஆய்வு செய்து, உறுதிப்படுத்த வேண்டும். ஆறு, ஏரி, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். நீர் நிலைகளில் சிறுவர்கள் இறங்குவதால் உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்க, எச்சரிக்கை பேனர்கள் வைக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை, கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் அவசர கால கட்டுப்பாட்டு அறையின், 1077 மற்றும் 0421 2971199 என்கிற எண்ணில் தெரிவிக்கலாம். வடகிழக்கு பருவ கால பேரிடர்களை எதிர்கொள்ள, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.