/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை மாநகரின் உள்கட்டமைப்பு சிறக்க 5 சதவீதம் சிறப்பு நிதி! மீண்டும் வலுக்கிறது தொழில்துறையினரின் 'குரல்'
/
பின்னலாடை மாநகரின் உள்கட்டமைப்பு சிறக்க 5 சதவீதம் சிறப்பு நிதி! மீண்டும் வலுக்கிறது தொழில்துறையினரின் 'குரல்'
பின்னலாடை மாநகரின் உள்கட்டமைப்பு சிறக்க 5 சதவீதம் சிறப்பு நிதி! மீண்டும் வலுக்கிறது தொழில்துறையினரின் 'குரல்'
பின்னலாடை மாநகரின் உள்கட்டமைப்பு சிறக்க 5 சதவீதம் சிறப்பு நிதி! மீண்டும் வலுக்கிறது தொழில்துறையினரின் 'குரல்'
UPDATED : செப் 15, 2025 06:26 AM
ADDED : செப் 15, 2025 12:20 AM

திருப்பூர்: ''திருப்பூரின் உள் கட்டமைப்பு வசதிக்காக, ஒட்டுமொத்த பின்ன லாடை வர்த்தகத்தில், 5 சதவீதத்தை சிறப்பு நிதியாக ஒதுக்க வேண்டும்'' என்ற குரல், தொழில் அமைப்புகளிடம் இருந்து ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது.
'டாலர் சிட்டி'யான திருப்பூரில், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 45 ஆயிரம் கோடி ரூபாய்; உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம், 30 ஆயிரம் கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் அன்னிய செலாவணியை ஈட்டிக்கொடுத்தாலும், தொழில் நகரின் முன்னேற்றத்துக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து ஊக்குவிப்பதில்லை.
தொழிலாளர் தங்கும் விடுதி வசதி, தொழிற்சாலைகளுக்கான இணைப்பு சாலைகள், துறைமுகத்துடன் இணைக்கும் ரோடு வசதி என, நகர உள்கட்டமைப்பு வசதிக்கு, புதிய திட்டங்கள் இல்லை. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், மத்திய அரசிடம் சிறப்பு நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்து வருகிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தொழில் அமைப்பினரிடம் மீண்டும் இந்தக் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திருப்பூரில் தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்த, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியிடம், ''ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் என, 75000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது; அதில், 5 சதவீதம் அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கினால், கூடுதல் பாலம், ரோடு உட்பட, திருப்பூரின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தலாம்'' என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நிதி ஒதுக்க வேண்டும் திருக்குமரன், பொதுச்செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் - டீ:
திருப்பூரின் பின்னலாடை வர்த்தகத்தில், ஆண்டுக்கு ஒரு சதவீதம் அளவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கினால், தொழிலாளர் தங்குமிட வசதி உட்பட, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
மாநில அளவிலும், இதுதொடர்பாக கோரிக்கை விடுப்போம். ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு சிறப்பு நிதி ஒதுக்கினால், தொழிலாளர் நலன் சார்ந்த கட்டமைப்புகளையும் உருவாக்கலாம்; திருப்பூர் நகரமும்பொலிவு பெறும்.
புதிய மார்க்கெட்ஏற்படுத்தலாம் பாலச்சந்தர், துணைத்தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் - சைமா:
சிறப்பு நிதி ஒதுக்கினால், திருப்பூர் தொழில் நகரில் கூடுதல் வசதிகளை செய்யலாம். குறிப்பாக, உள்ளூர் பனியன் தொழில் வளர்ச்சிக்கான, புதிய மார்க்கெட் அமைக்கலாம். குறு, சிறு தொழில் முனைவோருக்காக, உற்பத்தி மையங்களை அமைக்கலாம்.
திருப்பூரில் உள்ள 'பிராண்ட்'களை, காட்சிப்படுத்தவும், வர்த்தக விசாரணை நடத்தவும் ஏதுவாக, புதிய வணிக வளாகங்களை உருவாக்க வேண்டும்; சிறப்பு நிதி ஒதுக்கீடு இருந்தால் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தலாம்.
உள்கட்டமைப்புமேம்படுத்த முடியும் செந்தில்வேல், பொதுச்செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் - டீமா:
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தின் வாயிலாக, மத்திய, மாநில அரசுகளுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வரிவருவாய் கிடைக்கிறது. அதிலிருந்து, இத்தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது, மொத்த வரிவருவாயில் 2 சதவீதத்தை சிறப்பு நிதியாக ஒதுக்கி, பின்னலாடை தொழில் மற்றும் தொழிலாளர் பயனடையும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.
அரசு ஒதுக்கும்நிதி போதாது தேவராஜ், பொருளாளர், திருப்பூர் உள்நாட்டுபின்னலாடை உற்பத்தியாளர் சங்கம்:
மத்திய, மாநில அரசுகளின் வழக்கமான திட்ட பணிகளால், திருப்பூரின் உள்கட்டமைப்பு மேம்படுத்த காலதாமதமாகும். சிறப்பு நிதி ஒதுக்கினால், திருப்பூர் மக்களும், தொழில்துறையினரும் பயனடைவர்.
வெளிநாட்டினர்அதிகம் வந்து செல்லும் திருப்பூர், 'டாலர் சிட்டி' என்று கூறும் அளவுக்கு, பொலிவுடன் காட்சியளிக்க வேண்டும். அதற்காக, தொழில் நகரமான திருப்பூருக்கு சிறப்பு நிதி ஒதுக்கினால் மட்டுமே, வளர்ந்த நகரங்களை போல், உள்கட்டமைப்பு வசதி மேம்படும்.
தனி வாரியம்அமைக்க வேண்டும் முருகேசன், செயலாளர், பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம்:
மத்தியஅரசு, ஜவுளித்துறையில் உள்ள பின்னலாடை தொழிலுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். திருப்பூரில், உள்ளாடைகள் மட்டும், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கிறது.
உள்நாட்டு உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கும் தகுந்த உதவியும், மானியமும் வழங்க வேண்டும்; ஜி.எஸ்.டி., யில் சிறப்பு சலுகை அவசியம்.
நகரின் பொது சுகாதாரம், குடிநீர், நகர போக்குவரத்து மேம்படவும் சிறப்பு நிதி ஒதுக்கீடு அவசியம். இதற்காக, உற்பத்தியில் 5 சதவீதம் சிறப்பு நிதி ஒதுக்கமுன்வர வேண்டும்.