/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிகளை மீறி இயக்கப்பட்ட பிற மாநில லாரிகள்; உடுமலை அருகே பறிமுதல்
/
விதிகளை மீறி இயக்கப்பட்ட பிற மாநில லாரிகள்; உடுமலை அருகே பறிமுதல்
விதிகளை மீறி இயக்கப்பட்ட பிற மாநில லாரிகள்; உடுமலை அருகே பறிமுதல்
விதிகளை மீறி இயக்கப்பட்ட பிற மாநில லாரிகள்; உடுமலை அருகே பறிமுதல்
ADDED : அக் 01, 2025 12:23 AM

உடுமலை; தமிழகத்துக்கான சாலை வரி செலுத்தாமல், வணிக ரீதியாக இயக்கப்பட்ட பிற மாநில பதிவெண் கொண்ட, 11 லாரிகளை உடுமலை வட்டார போக்குவரத்து துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, கோவை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநில பதிவெண் கொண்ட லாரிகள், வணிக ரீதியாக கட்டுமான மற்றும் ரோடு பணிகளுக்காக கிராவல் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.
ஆனால், லாரிகள் விதிமுறைகளின்படி, தமிழக சாலை வரி செலுத்தாமலும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் இயக்கப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, வரி செலுத்தாத 11 லாரிகளை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் கூறியதாவது: பிற மாநில வணிக வாகனங்கள், முன் அனுமதி மற்றும் மாநிலத்துக்கான சாலை வரியை செலுத்திய பிறகே, தமிழகத்தில் இயக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனுமதியை புதுப்பித்து, வரி செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்தாமல், உடுமலை பகுதியில், ரோடு அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இயக்கப்பட்ட, டி.பி.ஜே. நிறுவனத்தின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதத்துடன் சாலை வரி செலுத்தாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வணிகம் மட்டுமல்லாது பிற மாநில பதிவெண் கொண்ட இதர வாகனங்களும், 12 மாதங்களுக்கு மேல் தமிழகத்திற்குள் இருந்தால், அவ்வாகனங்கள் முறையாக உள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.