/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து மாற்றத்தால் மாநகரில் ஒரு நாள் 'கூத்து' !திட்டமிடல் இல்லாததால் தவித்த மக்கள்
/
போக்குவரத்து மாற்றத்தால் மாநகரில் ஒரு நாள் 'கூத்து' !திட்டமிடல் இல்லாததால் தவித்த மக்கள்
போக்குவரத்து மாற்றத்தால் மாநகரில் ஒரு நாள் 'கூத்து' !திட்டமிடல் இல்லாததால் தவித்த மக்கள்
போக்குவரத்து மாற்றத்தால் மாநகரில் ஒரு நாள் 'கூத்து' !திட்டமிடல் இல்லாததால் தவித்த மக்கள்
ADDED : நவ 02, 2025 11:39 PM

திருப்பூர்:திருப்பூர், குமரன் ரோட்டின் குறுக்கே சுரங்கப்பாலம் பணி மேற்கொள்வதற்காக, செயல்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றம், கேலிக்கூத்தாக முடிந்தது. போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவு சென்றதால், ஒரே நாளில், போக்குவரத்து மாற்றம் ரத்தானது. நடராஜா தியேட்டர் புதிய பாலம் திறக்கப்படாமலும், மாற்றுப் பாதைகள் சரிசெய்யப்படாமலும், அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் தவித்தனர்; இது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு
திருப்பூரில், பார்க் ரோட்டையும், யுனிவர்சல் ரோட்டையும் இணைக்கும் வகையில், சுரங்கப்பாலம் பணி தீவிரமாக நடக்கிறது. குமரன் ரோட்டின் குறுக்கே, இப்பணியை மேற்கொள்வதற்காக, நேற்று முன்தினம் போலீசார் போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தினர். இதனால், குமரன் ரோடு, மங்கலம் ரோடு, நடராஜ் தியேட்டர் ரோடு என, அனைத்து பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மீண்டும் பழைய முறை
ஆய்வு செய்த, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மங்கலம் ரோட்டில் நெரிசல் ஏற்படுவதை அறிந்தார். அந்த ரோட்டில் பழைய முறைப்படி மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின், குமரன் ரோட்டில் நெரிசல் நீடித்தது. குமரன் ரோடு செல்லும் கனரக வாகனங்கள், ஊத்துக்குளி ரோடு வழியாக திருப்பி விடப்பட்டது. ஆனாலும், போக்குவரத்து மாற்றம் பலனளிக்காததால், இரவு முதல் பழைய முறைப்படியே போக்குவரத்து மாற்றத்தை செய்தனர்.
கடந்த, 2023ல் நகர்புற உள் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு நிதியில் திருப்பூரில், நான்கு இடங்களில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது. நொய்யல் ஆற்றின் குறுக்கே, 18 கோடி ரூபாய் மதிப்பில் ஈஸ்வரன் கோவில் அருகிலும், 14 கோடி ரூபாய் மதிப்பில் நடராஜா தியேட்டர் அருகேயுள்ள பாலம் கட்டும் பணி நடந்தது.
பாலம் திறப்பு தாமதம்
நடராஜா தியேட்டர் பாலம் அனைத்து பணிகளும் முடிந்த பின், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. சுரங்க பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றத்தை மேற்கொள்ள போலீஸ் தரப்பில், அந்த பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கோரினர். மாநகராட்சி தரப்பில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. கடந்த மாதம் இதேபோன்று, ஒரு முறை போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவித்து கைவிடப்பட்டது. தற்போது, சுரங்கப்பாலம் பணி அடுத்த கட்டத்துக்கு சென்றதால், மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நடராஜா தியேட்டர் பாலம் திறக்கப்படாமலேயே நேற்று முன்தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இது நெரிசல் ஏற்பட பிரதானக்காரணமாக அமைந்தது.

