/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெளிநாட்டு பறவைகளின் வலசை குறைகிறது! உலகளாவிய காலநிலை மாற்றம் காரணமா?
/
வெளிநாட்டு பறவைகளின் வலசை குறைகிறது! உலகளாவிய காலநிலை மாற்றம் காரணமா?
வெளிநாட்டு பறவைகளின் வலசை குறைகிறது! உலகளாவிய காலநிலை மாற்றம் காரணமா?
வெளிநாட்டு பறவைகளின் வலசை குறைகிறது! உலகளாவிய காலநிலை மாற்றம் காரணமா?
ADDED : அக் 14, 2025 11:48 PM

திருப்பூர்: திருப்பூர், நஞ்சராயன் குளத்தில் வெளிநாட்டு பறவைகளின் வலசை, வழக்கத்தை காட்டிலும் குறைந்திருக்கிறது.
'உலகளவில் ஏற்பட் டுள்ள காலநிலை மாற்றம், பறவைகளின் குளிர்கால வலசையை பாதிக்கச் செய்துள்ளது' என, பறவை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:
ஒரு நாள் கணக்கெடுப்பில், 72 வகையான, 1,690 பறவைகள் தென்பட்டன. இந்த எண்ணிக்கை கவலையளிக்கிறது. காரணம், கடந்த, 2015 , 2016 ஆண்டுக்கு முன் வரை, அக்., நவ., மாதங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் பறவைகளை ஒரு நாளில் பார்க்க முடிந்தது.
ஆண்டுக்காண்டு பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. படிப்படியாக குறைந்து, 2020க்கு பின் 3,000 பறவைகளை மட்டுமே பார்க்க முடிந்தது; தற்போது, அதுவும் குறைந்திருக்கிறது.
பொதுவாக, குளிர்காலமான அக்., துவங்கி அதிகளவு வெளிநாட்டு பறவைகள் வலசை வரும். இமயமலை அடிவாரத்தில் இருந்து வலசை வரும் நீளவால் பஞ்சுருட்டான் என்கிற பறவை, மத்திய ஆசிய நாடுகளில் இருந்து வரக்கூடிய புதர் பறவையான கதிர் குருவி, ஆர்டிக் துருவப்பகுதியில் இருந்து வரும் 'செங்கழுத்து உள்ளான்', கடற்கரை பறவையான பொரி மண் கொத்தி மற்றும் தகைவிலான் பறவை, நீலச்சிறகி உள்ளிட்ட, ஏழு வகையான வெளிநாட்டு பறவைகளை மட்டும், மிக சொற்ப எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது.
இந்த சமயத்தில், தட்டைவாயன் என்கிற வாத்து, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டு காணப்படும். ஆனால், அவற்றின் எண்ணிக்கையும், 300க்கு குறைவாகவே தென்படுகிறது. அதேபோல், நீலச்சிறகி உள்ளிட்ட ஊசிவால் வாத்து, கிழுவை, சிறிய கொசு உள்ளான், மண் கொத்து, சதுப்பு மண்கொத்தி உள்ளிட்ட பல பறவைகளை கூட பார்ப்பது அரிதாக இருக்கிறது.
நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் தற்போது வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் அளவுக்கு அதன் சூழல் தன்மை இருப்பினும், பறவைகள் வலசை குறைந்திருப்பது வியப்பளிக்கிறது.
பிற மாவட்டங்களில் உள்ள பறவைகள் சரணாலயத்தின் நிலை குறித்து அறிந்து வருகிறோம். பறவைகள் வலசை குறைந்தற்கான காரணம் குறித்து உலகளவில் உள்ள பறவை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளரிடம் கலந்தாலோசித்தோம்.
பொதுவாக, ஆர்டிக் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளிலும், குளிர் காலத்தில், பனிப்பொழிவும், கடுங்குளிரான காலநிலையும் நிலவும். இந்த கடுங்குளிர், பனிப்பொழிவில் இருந்து தப்பிக்கவும், தங்களுக்கு தேவையான இரையை தேடவும், மித வெப்ப நாடுகளான கிழக்கு மற்றும் தென் கிழக்கில் உள்ள நாடுகளுக்கு வலசை வரும்.
தற்போது உலகளாவிய காலநிலை மாற்றத்தால், ஆர்டிக் மற்றும் அதையொட்டிய நாடுகளில் கடுங்குளிர் குறைந்திருக்கலாம். அதனால், 7,000 முதல், 8,000 கி.மீ., துாரம் பறந்து சென்று இரை தேடுவதை பறவைகள் தவிர்த்திருக்கலாம் எனவும், பறவை ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.