ADDED : ஏப் 05, 2026 06:34 AM

'தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, பயனுள்ளதாக இருந்தது; உயர்கல்வி குறித்த தெளிவு கிடைத்தது; நாங்கள் எதிர்காலத்தில் சாதிப்போம் என்ற நம்பிக்கை பிறந்தது' என மாணவ, மாணவியர் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
மாணவர்கள் பேட்டி
முகமது அர்ஷிப்: உயர்கல்வி தொடர்பாக எந்தவொரு 'ஐடியா' வும் இல்லாமல் தான் வந்தேன். எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பத்திற்கு ஒரு விடை கிடைத்திருக்கிறது. நம் நாட்டின் ராணுவ செயல்பாடுகள், பாதுகாப்புத்துறை சார்ந்த விஷயங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. சைபர் செக்யூரிட்டி துறையை தேர்ந்தெடுக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீ நேத்ரா: பிளஸ் 2க்கு பின், பி.காம். படிக்கும் யோசனை இருந்தது; வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கெடுத்த பின், பி.காம். பாடப்பிரிவில், ஏராளமான பிரிவுகள், அது சார்ந்த வேலை வாய்ப்பு இருப்பதை அறிந்துக் கொண்டேன்; இதனால் என் உயர்கல்வி தேர்வு எளிதானது.
ஹாசினி: உயர் கல்விக்கு, நான் என்னென்ன படிப்பை தேடி வந்தேனோ அதுகுறித்த ஒரு தெளிவு கிடைத்தது. எந்தெந்த படிப்புக்கு எவ்வளவு கட்டணம், எந்தெந்த கல்லுாரியில் அந்த பாடப்பிரிவு உள்ளது என்பது குறித்த விவரங்களை தெரிந்துக் கொண்டேன்.
ஹயத்துல்லாகான்: கல்லுாரியில் என்னென்ன படிப்பு இருக்கிறது, என்ற எந்த வொரு 'ஐடியா'வும் இல்லை. இங்கு வந்த பின்பு தான், எத்தனை படிப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள முடிந்தது; மிகுந்த பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது.
சஞ்சனா: நம் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள், விமானம், ஏவுகணை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விஞ்ஞானி டில்லிபாபுவின் பேச்சு என்னை ஈர்த்தது. அந்த துறையிலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. 'கேட்' தேர்வெழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
பூர்விகா ஸ்ரீ: என் குடும்பத்தினருடன், வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். உயர்கல்வி குறித்த ஒரு தெளிவும், வாழ்க்கையில் முன்னேற எத்தனை எத்தனை வாய்ப்புகளை கல்வி வழங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. பி.காம் சார்ந்து பல துறைகள் இருப்பது இப்போது தான் தெரிந்தது.
பெற்றோர் பேட்டி
குழப்பம் போயே போச்சு!
முத்து, திருப்பூர்: என் மகனுக்கு, கல்லுாரியில் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. ஒரு தெளிவு கிடைக்கும் என்பதற்காகத்தான் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்தேன். 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' என்ற தலைப்பில் விஞ்ஞானி டில்லி பாபு பேசியது, சிந்திக்க வைத்தது. ஆராய்ச்சி துறையில் என் மகனை ஈடுபடுத்தலாமா என்ற யோசனை வந்திருக்கிறது.
சரண்யா, திருப்பூர்: என் மகள், இந்தாண்டு தான், 10ம் வகுப்பு படிக்கிறாள். இருந்தாலும், என் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களையும் 'வழிகாட்டி' நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தேன். கல்வியாளர் அஷ்வின் பேச்சு, பெற்றோர், மாணவர் என இருவருக்கும் பாடம் புகட்டுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழ் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது. மணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் சிறந்த வழிகாட்டுதல் என்று தான் சொல்ல வேண்டும்.
