/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை சார் உற்பத்திக்கு மதிப்பு; 'கிரீன் டேக்' அங்கீகாரம் கிடைத்தால் சிறப்பு; திருப்பூர் பின்னலாடை - ஜவுளி தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
/
பசுமை சார் உற்பத்திக்கு மதிப்பு; 'கிரீன் டேக்' அங்கீகாரம் கிடைத்தால் சிறப்பு; திருப்பூர் பின்னலாடை - ஜவுளி தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
பசுமை சார் உற்பத்திக்கு மதிப்பு; 'கிரீன் டேக்' அங்கீகாரம் கிடைத்தால் சிறப்பு; திருப்பூர் பின்னலாடை - ஜவுளி தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
பசுமை சார் உற்பத்திக்கு மதிப்பு; 'கிரீன் டேக்' அங்கீகாரம் கிடைத்தால் சிறப்பு; திருப்பூர் பின்னலாடை - ஜவுளி தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : செப் 28, 2025 07:39 AM

திருப்பூர்: திருப்பூரில் உற்பத்தியாகும் அனைத்துவகை ஆடைகளுக்கும், 'கிரீன் டேக்' என்ற சிறப்பு அங்கீகாரம் வழங்கினால், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில் தனி மதிப்பு கிடைக்கும் என, தொழில்துறையினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளுடன், 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், சைமா உட்பட, பல்வேறு சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
தீர்வு கிடைக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல்:
தொழில் அமைப்புகளின் நிறை, குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய முன்வந்துள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி. அமெரிக்க வரி உயர்வால், திருப்பூருக்கு அதிக பாதிப்பில்லை; இருப்பினும், தீபாவளிக்கு முன்னதாக, இரண்டாம் நிலை வரி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். 'மார்க்கெட் போக்கஸ்' திட்டம், வட்டி சமன்படுத்தும் திட்டங்களில் உதவி கிடைத்தால், பாதிப்பை சமாளிக்கலாம். திருப்பூரில், தொழிலாளர் பற்றாக்குறை இன்னும் இருக்கிறது. தற்போது வந்தாலும், 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியும். பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். தமிழக அரசு, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதியை ஏற்படுத்த சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அமெரிக்க வரிஉயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
உதவி வேண்டும் தேசிய வர்த்தக வளர்ச்சி வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம்:
சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், இன்று மாநகரமாகவும், மாவட்ட தலைநகரமாகவும் உயர்ந்துள்ளது, பனியன் தொழிலால்தான். அனைத்து மாவட்ட, மாநில மக்களும் திருப்பூரில் தொழிலாளராக உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்கி பணியாற்றுகின்றனர். அரசு மானியத்துடன் தொழிலாளர் தங்குமிட வசதியை ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள், தேவையான உதவியை வழங்க வேண்டும்.
பசுமை அங்கீகாரம் 'சைமா' தலைவர் சண்முகசுந்தரம்:
திருப்பூரில், வெளிமாநில தொழிலாளர் அதிகம் வசிக்கின்றனர்; அவர்கள் பாதுகாப்பாக தங்க, தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நாளுக்கு நாள் தொழிலாளரின் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கும். தொழிலாளருக்கு, முறையான தொழில் பயிற்சி அளித்து தயாராக்க, திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும். வடமாநில தொழிலாளர் வரும் போது, அவர்களது முழுவிவரங்களையும் பெற்று, ஆன்லைன் மூலமாக பராமரிக்க வேண்டும். இந்தியாவிலேயே, திருப்பூரில் மட்டும்தான், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நடக்கிறது. எனவே, திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகளுக்கு, தனி பசுமை அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
'கிரீன் டேக்' மோகனசுந்தரம், உறுப்பினர், தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வாரியம்:
லகு உத்யோக் பாரதி கோரிக்கை வைத்ததன் பயனாக, இன்று, 100 படுக்கையுடன் கூடிய இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளருக்கு, பாதுகாப்பான தங்குமிட வசதி வேண்டும். நிரந்தர தொழிலாளர் மிகவும் குறைவு; வெளிமாநில தொழிலாளர் வசதிக்காக, தங்குமிட வசதி வேண்டும். திருப்பூரில், மரபுசாரா எரிசக்தி, மரம் வளர்ப்பு, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் என, நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தியை செய்து வருகிறோம். உள்நாட்டு உற்பத்தியாளருக்கு, உலக அளவிலான, 'டிரெண்டிங்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகளுக்கு, 'கிரீன் டேக்' என்ற அந்தஸ்து வழங்க வேண்டும்.
விழிப்புணர்வு இல்லை ராமன் அழகிய மணவாளன், மாவட்ட துணை தலைவர், லகு உத்யோக் பாரதி:
இந்திய தொழில் கூட்டமைப்பு, 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில், முக்கிய தொழில்நகரங்களை கண்டறிந்து, ஏழு வகையான பணிகள் மூலமாக, பசுமை நகரங்களாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இதுதொடர்பாக, நகர்ப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, தொழில்துறை மற்றும் பொதுமக்களுக்கான தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில், ஏழு நகரங்கள் பசுமை நகரம் என்ற அந்தஸ்து பெற்றுள்ளன; ஆனால், தென்மாநிலங்களில் எந்நகரமும் அத்தகைய அங்கீகாரம் பெறவில்லை.
அதிக முதலீடு பூபதி, முதன்மை செயல் அலுவலர், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம்:
திருப்பூரில் உள்ள அனைத்து சாய ஆலைகளும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள். நாளுக்கு நாள் உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. அதிக முதலீடு செய்து இயங்கினாலும்,எதிர்பார்த்த வருவாய் இல்லை. குறிப்பாக, புதிய மெஷின்கள் வாங்க, அதிகபட்ச மானியம் வழங்க வேண்டும். மின்கட்டண செலவு, 40 சதவீதம் ஏற்படுவதால், சோலார் கட்டமைப்பு நிறுவும் மானிய திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும். தேங்கியுள்ள, மிக்சர் உப்பு கலவையை அகற்றவும் வழிகாட்ட வேண்டும்.
ரயில் வசதி பொன்னுசாமி, இணை செயலாளர், 'சைமா' சங்கம்:
வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர் திருப்பூர் வந்துசெல்ல, சரியான ரயில்வசதி இல்லை. திருப்பூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். அதேபோல், வடமாநிலங்களில் அரசு சார்பில் வேலை வாயப்பு முகாம் நடத்தி, அங்கிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து வேலை வழங்கலாம். தொழிலாளர்களை அழைத்துவர வாகனம் இயக்க வேண்டியுள்ளதால், ரயில்வசதியை மேம்படுத்த வேண்டும்.
சோலார் மானியம் விசைத்தறியாளர் சங்க நிர்வாக பாலசுப்பிரமணியம்:
தமிழக அரசு, பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் மானிய திட்டம் அறிவிக்கப்பட்டது. தறி நவீனப்படுத்த, 1.25 லட்சம் ரூபாயாக மானியம் வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வந்தது, அரசாணையில் மானியம் குறைந்து விட்டது. 2.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. விசைத்தறியை 24 மணி நேரமும் இயக்குகிறோம். சோலார் கட்டமைப்பு நிறுவ மானியம் வழங்க வேண்டும்.