/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை பிரச்னை: மாநகராட்சி சமாளிக்குமா?
/
குப்பை பிரச்னை: மாநகராட்சி சமாளிக்குமா?
ADDED : அக் 20, 2025 10:48 PM

திருப்பூர்: பாறைக்குழியில் குப்பை கொட்ட தடை விதித்தும், மேலும் சில நடைமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தி திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோர்ட் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இந்த நடைமுறைகள் செயல்படுத்துவது குறித்த நடவடிக்கைக்கான ஆய்வுகளை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது.
கோர்ட் உத்தரவு காரணமாக குப்பைகளை கையாள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகள் உரிய வார்டு பகுதிகளில் காலியாக உள்ள இடங்கள்; பெரிய அளவில் விசாலமாக உள்ள ரோடுகளின் ஓரங்களிலும் குவித்து வைக்கப்படுகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் தொழிற்சாலைகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனால் தொழிற்சாலை கழிவுகள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தீபாவளி விற்பனை காரணமாக வழக்கத்தை விட அதிகளவிலான கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் பல்க் வேஸ்ட் உற்பத்தியாளர்கள் என்பதால், அவர்களே அவற்றை கையாளும் நடைமுறை காரணமாக இதனால் பெரியளவிலான பிரச்னை எழவில்லை. மேலும் குடியிருப்பு பகுதிகளைப் பொறுத்தவரை பெரும்பாலான வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டனர்.
வழக்கத்தை விட குறைவான அளவிலான கழிவுகள் மட்டுமே தற்போது சேகரமாகிறது. இதனால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு இப்பிரச்னையில் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்து திருப்பூர் வழக்கமான இயக்கத்துக்கு வரும் நிலையில் இப்பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.
உறுதியான, தீர்க்கமான ஒரு தீர்வை ஏற்படுத்தி அதை நோக்கிப் பயணித்தால் மட்டுமே இன்னும் ஒரு சில நாட்களில்குப்பை பிரச்னையை மாநகராட்சி நிர்வாகம் சமாளிக்கும் நெருக்கடியான நிலை நிலவுகிறது.