/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டும் பிரச்னை 'பூதாகரம்'! ஆர்ப்பாட்டம் - தள்ளுமுள்ளு - மறியல்; மக்களை குண்டுக்கட்டாக 'அள்ளிய' போலீஸ்; காங்கயம் ரோட்டில் ஒரே 'களேபரம்'
/
குப்பை கொட்டும் பிரச்னை 'பூதாகரம்'! ஆர்ப்பாட்டம் - தள்ளுமுள்ளு - மறியல்; மக்களை குண்டுக்கட்டாக 'அள்ளிய' போலீஸ்; காங்கயம் ரோட்டில் ஒரே 'களேபரம்'
குப்பை கொட்டும் பிரச்னை 'பூதாகரம்'! ஆர்ப்பாட்டம் - தள்ளுமுள்ளு - மறியல்; மக்களை குண்டுக்கட்டாக 'அள்ளிய' போலீஸ்; காங்கயம் ரோட்டில் ஒரே 'களேபரம்'
குப்பை கொட்டும் பிரச்னை 'பூதாகரம்'! ஆர்ப்பாட்டம் - தள்ளுமுள்ளு - மறியல்; மக்களை குண்டுக்கட்டாக 'அள்ளிய' போலீஸ்; காங்கயம் ரோட்டில் ஒரே 'களேபரம்'
UPDATED : செப் 23, 2025 05:55 AM
ADDED : செப் 23, 2025 05:53 AM

திருப்பூர்: முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டம் மறியலாக மாறியது. அதில், ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி சென்று கைது செய்தனர்.
திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பை கழிவுகள் தற்போது முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்படுகிறது. குப்பை கொட்டுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. நிலம் மற்றும் காற்று மாசுபடுகிறது. எனவே, பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க மாற்று வழியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
முதலிபாளையம் பொதுமக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பிரிவில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் கட்சி மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள் திறந்த வாகனத்தில் நின்று பேசினர். ரோட்டின் ஒருபுறம் ஆண்களும், மறுபுறம் பெண்களும், கைகளில், பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
ஒரு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் திடீரென காங்கயம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு தாசில்தார் சரவணன், பல்லடம் டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் பேச்சு நடத்தியும் எந்தப்பயனும் ஏற்படவில்லை.
மக்கள் ஆவேசம்
'எம்.எல்.ஏ., மற்றும் மேயர் இங்கு வர வேண்டும். பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும்,' என வலியுறுத்தி மறியலைத் தொடர்ந்தனர். இதனால், காங்கயம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் சிலரை பிடித்து வாகனத்தில் ஏற்றினர். அந்த வாகனத்தை மறித்து போராட்டம் தொடர்ந்ததால், அவர்களை போலீசார் கீழே இறக்கி விட்டனர்.
அதன்பின் பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, அதில் சிலரை போலீசார் குண்டுக் கட்டாகத் துாக்கிச் சென்று ஏற்றினர். அங்கிருந்து புறப்பட்ட அந்த வாகனத்தையும் நடுரோட்டில் சிலர் மறித்தனர்.
ஒரு வாலிபர் அந்த வாகனத்தின் சாவியை டிரைவரை தாக்கி விட்டு பறித்துக் கொண்டு கூட்டத்துக்குள் ஓடி விட்டார். இதனால், அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட முடியாமல் நீண்ட நேரம் அதே நிலையில் நின்றிருந்தது.
ஒரு வழியாகப் போராடி அந்நபரை பிடித்து சாவியை வாங்கி, வாகனத்தை கிளப்பினர். அடுத்து ஒரு பள்ளி வாகனத்திலும் சிலர் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் பெண்கள் மறியலைக் கைவிடாமல் தொடர்ந்து கோஷமிட்டவாறு அமர்ந்திருந்தனர். பெண்களை, பெண் போலீசார் குண்டுக் கட்டாகத் துாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
அவ்வகையில், 136 பெண்கள் மற்றும் 96 ஆண்கள் அலகுமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியலால், ஒன்றரை மணிநேரம் காங்கயம் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.
கடைகள் அடைப்பு
பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முதலிபாளையம் பிரிவு, ஹவுசிங் யூனிட் பிரிவு, நாச்சிபாளையம் பிரிவு, முதலிபாளையம் மற்றும் ஹவுசிங் யூனிட் பகுதிகளில் நுாற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
போலீசாருடன் வாக்குவாதம்
மறியலில் ஈடுபட்டோரை அங்கிருந்து அப்புறப்படுத்த, போலீசார் முயற்சி செய்தனர். சிலரை வாகனத்தில் ஏற்ற முயன்றபோது, மற்றவர்கள் தடுக்க முயற்சித்தனர். இதுபோல, மூன்று முறை நடந்ததால், போலீசாருடன் தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், சிலர் இறங்க முயற்சித்தனர். போலீசார் அவர்களை தடுத்த போதும் கடும் வாக்குவாதம் நடந்தது.