/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெருங்கும் தீபாவளி! கண்காணிப்பு பணி, போலீசார் தீவிரம்
/
நெருங்கும் தீபாவளி! கண்காணிப்பு பணி, போலீசார் தீவிரம்
நெருங்கும் தீபாவளி! கண்காணிப்பு பணி, போலீசார் தீவிரம்
நெருங்கும் தீபாவளி! கண்காணிப்பு பணி, போலீசார் தீவிரம்
ADDED : செப் 26, 2025 06:51 AM

திருப்பூர்: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி என, அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால், நகரில் வணிக நிறுவனங்கள், பிரதான ரோடுகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த தே வையான நடவடிக்கையை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
'டாலர் சிட்டி'யான திருப்பூரில் வெளி மாவட்ட, வெளி மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்தாண்டு தீபாவளி, அக்., 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக, அக்., 1ல் சரஸ்வதி பூஜை, 2ல் விஜயதசமி என பண்டிகைகள் வரிசைகட்டி வர உள்ளது. இதனால், தற்போது இருந்தே நகரில் துணி கடைகள், பூக்கடை, பலகாரம், நடைபாதை, பர்னிச்சர் கடைகளில் மக்கள் கூட்டம் வர துவங்கியுள்ளது.
இதனால், கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதாலும், உள்ளூர் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடிய மக்கள் தற்போதில் இருந்தே 'பர்ச்சேஸ்' பணியில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். நகரில் பஸ் ஸ்டாண்ட், குமரன் ரோடு, பி.என். ரோடு, பல்லடம் ரோடு, மாநகராட்சி சந்திப்பு, புது மார்க்கெட் வீதி போன்ற பகுதியில் மாலை நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் வருகிறது.
பிரதான ரோடு, முக்கிய சந்திப்புகளில் மக்கள் கூட்டம், வாகன போக்குவரத்து அதிகம் இருந்து வருகிறது. இந்நிலையில், கனரக வாகனங்கள் மாநகரில் நுழைந்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடும் கனரக வாகனங்களை தவிர்த்து, மற்ற கனரக வாகனங்கள் மாநகரில் நுழைய போலீசார் தடை விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், பூ மார்க்கெட் வீதிகளில் தற்போதே மக்கள் கூட்டம் வர துவங்கியுள்ளது. நகரில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீசார் கூடுதலாக கண்காணிப்பு செய்ய உள்ளனர். சுழற்சி முறையில் ரோந்து போலீசார் பணியில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளனர். போக்குவரத்து நெரிசல் இல்லாமல், வாகனங்கள் சீராக செல்லவும் ஆங்காங்கே போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் கூட்டத்துக்கு தகுந்தாற் போல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் போன்றவற்றை செய்ய ஆலோசனை செய்து வருகின்றனர். வரும் நாட்களில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் களை கட்டும் என்பதால், கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர்.