/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாங்கியது கோவில் நிலமா? அல்லாளபுரத்தில் இடம் வாங்கியவர்கள் அதிர்ச்சி
/
வாங்கியது கோவில் நிலமா? அல்லாளபுரத்தில் இடம் வாங்கியவர்கள் அதிர்ச்சி
வாங்கியது கோவில் நிலமா? அல்லாளபுரத்தில் இடம் வாங்கியவர்கள் அதிர்ச்சி
வாங்கியது கோவில் நிலமா? அல்லாளபுரத்தில் இடம் வாங்கியவர்கள் அதிர்ச்சி
ADDED : செப் 11, 2025 10:28 PM

திருப்பூர்; அல்லாளபுரம் பகுதியில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை, அறநிலையத் துறை பட்டியலிட்டு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அளித்துள்ளது. இதனால், இடம் வாங்கியோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் அருகேயுள்ள அல்லாளபுரத்தில் உலகேஸ்வர சுவாமி மற்றும் வரதராஜபெருமாள் கோவில்கள் உள்ளன. பழமையான இக்கோவில்கள் தற்போது ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இக்கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆங்காங்கே பல பகுதிகளில் உள்ளன. அவ்வகையில் வருவாய்த்துறையின் 1912ம் ஆண்டுப்படியான ஆவணங்களின் அடிப்படையில், இக்கோவில் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வகையில், கரைப்புதுாரில் உலகேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலம், 32 சர்வே பகுதிகளில் மொத்தம் 216.29 ஏக்கர் உள்ளது. மேலும் கரிவரதராஜபெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஒன்பது சர்வே எண்களில், 30.57 ஏக்கர் நிலமும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை, கோவில் செயல் அலுவலர் வளர்மதி, பத்திரப் பதிவுத்துறை, பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.
மேலும், இந்த நிலங்களின் மீது எவ்வித பத்திரப் பதிவு நடவடிக்கை, உட்பிரிவு மாற்றம் மேற்கொள்ள வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கோவிலுக்குச் சொந்தமானதாகத் தெரிவிக்கப்பட்ட பகுதியில் இடம் வாங்கியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடம் வாங்கிய நில உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், 'அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த வாரம் ஒரு நிலம் பத்திரப் பதிவுக்குச் சென்ற போது, அறிவிப்பை மேற்கோள் காட்டி, பதிவு மறுக்கப்பட்டது.
அப்போது தான் இந்த விவரமே தெரிய வந்தது. அடுத்த கட்டமாக எங்களிடம் உள்ள ஆவணங்களை சரி பார்த்து, எங்களது மூலப் பத்திரம் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்,' என்றனர்.