/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்; முன்னெச்சரிக்கை அவசியம்!
/
அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்; முன்னெச்சரிக்கை அவசியம்!
அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்; முன்னெச்சரிக்கை அவசியம்!
அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்; முன்னெச்சரிக்கை அவசியம்!
ADDED : அக் 14, 2025 11:18 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தென்பட துவங்கியுள்ள நிலையில், கொசு உற்பத்தி மற்றும் அதன் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
'பருவமழை தீவிரமடையும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், முன்கூட்டியே மழை பெய்ய துவங்கியிருக்கிறது. தேங்கி நிற்கும் நீரில் இருந்து உற்பத்தியாகும் ஏடிஸ் கொசு வாயிலாக தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என, சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவ துவங்கியிருக்கிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கொசு மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகளில், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், ஒவ்வொரு வார்டிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடக்கும் போதிலும், கிராம ஊராட்சிகளில் இப்பணியில் சுணக்கம் தென்படுகிறது. பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் குப்பை சேகரிக்கும் பணி கூட, தினசரி சரிவர நடப்பதில்லை. எனவே, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ள இக்காலக் கட்டத்தில், கூடுதலாக கொசு ஒழிப்பு பணியாளர்களை பணியமர்த்தி, டெங்கு கொசு ஒழிப்பு பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வெளிப்படையாக... டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் ஒருபுறமிருக்க, உயிர்பலி கூட ஏற்பட்டு விடுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு வெளியில் தெரிவதை, சுகாதாரப்பணிகள் துறையோ, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினரோ விரும்புவதில்லை. மாறாக, பாதிப்பை மூடிமறைக்க தான் முயற்சிக்கின்றனர்.
இதனால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து, மக்கள் தெரிந்து கொள்ள முடிவதில்லை.எனவே, தாலுகா வாரியாக தினசரி எத்தனை பேர், எந்தெந்த இடத்தில் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையை தெரியப்படுத்தினால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கும்.
இதன் வாயிலாக, அந்த பகுதியில் சுகாதாரப்பணியில் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்படும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு.