ADDED : மே 07, 2026 04:25 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளி மீது காப்பர் கம்பி மூட்டை சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகேஷ்குமார், 36. கும்மிடிப்பூண்டி மா.பொ.சி., நகரில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலையில் இருந்த போது, அடுக்கி வைக்கப்பட்டிருந்த காப்பர் கம்பி மூட்டை, இவர் மீது சரிந்து விழுந்தது.
கால் மற்றும் மார்பு பகுதியில் படுகாயமடைந்தவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, அவர் வசித்து வந்த அறையில் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
