/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்வாய் சிப்காட் சாலையில் தொடரும் விபத்துக்கள் அதிகாரிகள் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் பீதி
/
தேர்வாய் சிப்காட் சாலையில் தொடரும் விபத்துக்கள் அதிகாரிகள் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் பீதி
தேர்வாய் சிப்காட் சாலையில் தொடரும் விபத்துக்கள் அதிகாரிகள் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் பீதி
தேர்வாய் சிப்காட் சாலையில் தொடரும் விபத்துக்கள் அதிகாரிகள் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் பீதி
ADDED : செப் 20, 2025 02:31 AM

ஊத்துக்கோட்டை:போக்குவரத்து நிறைந்த ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் தினமும் ஏராளமான விபத்துகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை உட்பட, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இச்சாலை வழியாக, சென்னையில் இருந்து ஆந்திராவின் பிச்சாட்டூர், நகரி, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால் மற்றும் பெங்களூருக்கு சென்று வருகின்றன. தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு செல்லும் கனரக வாகனங்களும், இச்சாலை வழியே பயணிக்கின்றன.
தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலையில், சூளைமேனி, தண்டலம் ஆகிய இடங்களில் மைய தடுப்புகள் உள்ளன. ஆனால், இதுகுறித்து எவ்வித எச்சரிக்கை பலகையும் இல்லை. இதனால், இரவு நேரங்களில் மைய தடுப்பு இருப்பது தெரியாமல், வாகனங்கள் அதில் மோதி விபத்தில் சிக்குகின்றன.
சமீபத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காயம் ஏற்றி வந்த லாரி, சூளைமேனியில் உள்ள மைய தடுப்பு தெரியாமல் விபத்தில் சிக்கியது.
இரு நாட்களுக்கு முன், ஆந்திராவில் இருந்து டைல்ஸ் ஏற்றி வந்த லாரி, அதே இடத்தில் உள்ள மைய தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் போக்குவரத்து பாதித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூன்று கிரேன்கள் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த விபத்துகளில், அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
எனவே, உயிர்ச்சேதம் ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், இரவு நேரங்களில் அதிகளவு கனரக வாகனங்கள் செல்கின்றன. சூளைமேனி, தண்டலம் உள்ளிட்ட இடங்களில் மைய தடுப்பு இருப்பது தெரியாததால், அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. இதனால், விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள் அமைப்பது அவசியம். - வாகன ஓட்டி, சூளைமேனி.