/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்கு இல்லை
/
கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்கு இல்லை
ADDED : அக் 29, 2025 02:40 AM

திருநெல்வேலி: ''கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்கு இல்லை,'' என, திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சிறுபான்மை மக்களுடன் கலந்துரையாடும் கேள்வி-பதில் நிகழ்ச்சி திருநெல்வேலி மேலப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்விகளுக்கு பதில் அளித்தார். முன்னதாக அவர் அளித்த பேட்டி :
நவ., 15 தண்ணீர் மாநாடு நடத்த உள்ளேன். தண்ணீரோடு பேசுவேன். கல் குவாரிகள் விவகாரத்தில் குற்றத்தை அரசு தானே அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி விட்டது. தமிழகத்தில் 32 ஆறுகள் மரணித்து விட்டன.
நடிகரை நேசிப்பவர்கள் எங்களுக்கானவர்கள் அல்ல. நாட்டை நேசிப்பவர்கள்தான் எங்களுக்கானவர்கள். 150 கோடி மக்கள் வாழும் நாட்டில் 15 லட்சம் ராணுவ வீரர்கள்தான் நாட்டைப் பாதுகாக்கிறார்கள். நடிகர்களைத் தெய்வமாகக் காண்பது ஆபத்தானதும், அசிங்கமானதுமாகும்.
வ.உ.சி., பாரதியார் போன்ற அறிவார்ந்த மேதைகள் வாழ்ந்த இத்தமிழ்நாட்டில் அறிவார்ந்த சமூகம் திரை கவர்ச்சிக்குப் பின்னால் ஓடுவது அவமானம். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கிறேன். வடஇந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு அவர்களுடைய சொந்த மாநிலத்தில் வாக்குரிமை உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஒரு கோடி 25 லட்சம் ஹிந்தி பேசும் வடஇந்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால், தமிழ் சமூகத்தினர் பாதிக்கப்படுவர். அவர்கள் ஒரே மனநிலையில் வாக்களிப்பதால் பா.ஜ.க., விற்கே ஓட்டுகள் செல்லும்.
தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டங்களுக்கு எங்களை அழைக்கவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க., வுடன் கூட்டணியில் இருப்பதால், மத்திய அரசின் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது.
கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர், பொதுச்செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சம்பவத்திற்குக் காரணமானவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
அதன் தலைவர் விஜய் மீது வழக்கு ஏன் இல்லை.
சி.பி.ஐ., விசாரணை எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி. விசாரிக்கப்பட வேண்டியவர்கள் விஜய் அழைப்பில் சென்னை சென்று அவரைச் சந்தித்துள்ளனர். விசாரணை நடக்கும் நிலையில் இது நியாயமா.
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் சத்யா, பாளையில் டாக்டர் சரண் வேட்பாளர்களாக போட்டியிடுவர் என்றார்.

