/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி செல்லும் சாலை படுமோசம் டி.சி., கேட்கும் பெற்றோர்கள்
/
பள்ளி செல்லும் சாலை படுமோசம் டி.சி., கேட்கும் பெற்றோர்கள்
பள்ளி செல்லும் சாலை படுமோசம் டி.சி., கேட்கும் பெற்றோர்கள்
பள்ளி செல்லும் சாலை படுமோசம் டி.சி., கேட்கும் பெற்றோர்கள்
ADDED : ஜூன் 06, 2025 02:38 AM
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே பள்ளிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாததால் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் டி.சி., கேட்டு வருகின்றனர்.
இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு - - உரத்துப்பட்டி செல்லும் 5 கி.மீ., சாலை 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சீரமைக்கப்படாததால் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. மக்களின் தொடர் கோரிக்கைக்கு பிறகு 3 கி.மீ., துாரம் மீண்டும் போடப்பட்டது. மீதமுள்ள 2 கி.மீ., துாரம் வனப்பகுதியில் செல்வதாக கூறி வனத்துறையினர் தடை விதித்தனர். முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று சாலை அமைக்க வனத்துறையினர் அறிவுறுத்தினர். ஆனாலும் இதுவரை அனுமதி கிடைக்காததால் சாலைப்பணி கிடப்பிலேயே உள்ளது. அதேநேரம் இத்தாலுகாவில் இதே போல் பல சாலைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கிடப்பில் போடப்பட்டு தற்போது அனுமதி பெறப்பட்டு ரோடு பணி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை மட்டும் அப்படியே உள்ளது. இச்சாலையில் நடந்து கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கீழவண்ணாரிருப்பு கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஒரு கி.மீ., தூரமுள்ள மேலவண்ணாரிருப்பு நடுநிலைப்பள்ளிக்கு வர சிரமப்படுகின்றனர். அக்கிராமத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கும் நிலையில் அவர்களால் நடந்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டு பல மாணவர்களின் பெற்றோர் பள்ளியில் டி.சி., கேட்டு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். சாலையில் நடந்து வர முடியாததால் அருகே உள்ள மின்னமலைப்பட்டி பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். இதனால் மேலவண்ணாரிருப்பு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.