/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.100 கோடியில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு அரங்கம் ... சும்மாவே கிடக்குது!: பஸ் வசதியும் இல்லை; பராமரிப்பும் இல்லை
/
ரூ.100 கோடியில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு அரங்கம் ... சும்மாவே கிடக்குது!: பஸ் வசதியும் இல்லை; பராமரிப்பும் இல்லை
ரூ.100 கோடியில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு அரங்கம் ... சும்மாவே கிடக்குது!: பஸ் வசதியும் இல்லை; பராமரிப்பும் இல்லை
ரூ.100 கோடியில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு அரங்கம் ... சும்மாவே கிடக்குது!: பஸ் வசதியும் இல்லை; பராமரிப்பும் இல்லை
ADDED : செப் 16, 2025 04:36 AM

மதுரை: அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் ரூ.100 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் வருமானத்திற்கு வழி செய்யாததால் பராமரிப்பது சிரமமாக உள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகள் இதுவரை கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் நடத்தப்படாமல் பாரம்பரியமாக அந்தந்த கிராமங்களில் தான் நடத்தப்படுகிறது. அதன்பின் தனியார் அமைப்புகள் நடத்தும் சில ஜல்லிக்கட்டு போட்டிகள் மட்டும் பெயருக்கு ஜல்லிக்கட்டு அரங்கில் நடத்தப்பட்டன. அந்த நேரத்தில் மட்டும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் - அலங்காநல்லுார் பஸ் 4 கி.மீ., தொலைவிலுள்ள ஜல்லிக்கட்டு அரங்கு உள்ள பகுதிக்கு சென்று வருகிறது. மற்ற நாட்களில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
பொறுப்பு இல்லாத ஊழியர் அரசுப் போக்குவரத்தே இல்லாத இடத்தில் ரூ.100 கோடிக்கு ஜல்லிக்கட்டு அரங்கு நடத்தியதோடு முடிந்து விடவில்லை. இந்த அரங்கை நாள்தோறும் சுத்தம் செய்து பராமரிப்பதற்கு 15 பேர் வரை தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இங்கிருந்த உதவி சுற்றுலா அலுவலர் மாற்றப்பட்ட நிலையில் தற்காலிக ஊழியர்களை கண்காணிப்பதற்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் தற்காலிக ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். அரங்கில் என்ன தவறு நடந்தாலும் தற்காலிக ஊழியர் என்ற அடிப்படையில் எளிதாக தப்பிக்க முடியும், பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லை.
அரங்கில் ஜல்லிக்கட்டு பாரம்பரிய மியூசியம், பிறநாட்டு கலாசார மியூசியங்கள், ஜல்லிக்கட்டு, சுற்றுலா தகவல்களை ஆவணப்படமாக பார்க்கும் வகையில் 90 பேர் அமரும் ஏசி தியேட்டர், மிகப்பெரிய கேலரி, கூட்ட அரங்குகள் உள்ளன.
வாகன வசதியுள்ளோர் மட்டும் சனி, ஞாயிறுகளில் ஜல்லிக்கட்டு அரங்கு வந்து செல்கின்றனர். மற்ற நாட்களில் காற்றாடுகிறது. இதற்கு பார்வையாளர் கட்டணமும் நிர்ணயிக்கவில்லை. பூட்டிக் கிடக்கும் கூட்ட அரங்குகளை வாடகைக்கு விடும் திட்டமும் முழுமையாக செயல்படுத்தவில்லை.
உள்ளூர், வெளியூர் பார்வையாளர்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். இங்கே அடிப்படை வசதி கூட செய்யவில்லை. மூன்று மாதங்களில் சில நாட்களே இங்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. யானையை வாங்கி தீனி போட்ட கதையாக ரூ.100 கோடி செலவழித்து அரங்கு கட்டி அதில் வருமானம் ஈட்டுவதற்கான எந்த வழியையும் முறையாக செய்யவில்லை. சுற்றுலாத்துறை கமிஷனர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.