/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவு
மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவு
மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 19, 2025 02:48 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு முறைகேடு வழக்கில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியை, கீழமை நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிந்த இவ்வழக்கில் 23 பேர் கைதாகினர். இவர்களில் உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், பில் கலெக்டர் ரவிச்சந்திரன் உட்பட 15 பேருக்கு உயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே ஜாமின் அனுமதித்தது. மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் ஜாமின் மனுவை அந்நீதிமன்றம் செப்.16 ல் தள்ளுபடி செய்தது.
மாநகராட்சியில் உதவி கமிஷனராக இருந்த சுரேஷ்குமார் (இடமாறுதலில் துாத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரிந்தார்) ஜாமின் மனுவை மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர்,'காளவாசலில் ஒரு கட்டடத்திற்கு வரி குறைப்பு செய்ததில் மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
அக்கட்டட உரிமையாளர் ரூ.16 லட்சம் மாநகராட்சிக்கு செலுத்தியுள்ளார். வழக்கில் என்னை தவறாக சேர்த்துள்ளனர். சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மாநகராட்சியின் திருப்பரங்குன்றம் மண்டலம் 5 ன் தற்காலிக ஒப்பந்த தினக்கூலி தொழிலாளி மகாபாண்டி,'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. எப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை. போலீசார் என்னை கைது செய்யப் போவதாக கூறினர். முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மகேந்திரபதி, ஸ்ரீராம் ஆஜராகினர்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சுரேஷ்குமார் ஜாமின் மனு அக்.13 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. மகாபாண்டி சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அன்று அவரது ஜாமின் மனுவை அந்நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.