/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நியோமேக்ஸ் சொத்து பறிமுதல் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
நியோமேக்ஸ் சொத்து பறிமுதல் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 19, 2025 02:48 AM
மதுரை: மோசடி வழக்கில் சிக்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டது நியோமேக்ஸ் நிதி நிறுவனம். முதலீட்டாளர்களுக்கு தொகையை தராமல் மோசடியில் ஈடுபட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகத்தின் பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. அவற்றை பறிமுதல் செய்து தொகையை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த பதில் மனு: மோசடி தொடர்பாக 2023 ல் வழக்கு பதியப்பட்டது. இதுவரை 14 ஆயிரத்து 540 புகார்கள் வந்துள்ளன. புகார்தாரர்களிடம் ரூ.188 கோடியே 29 லட்சத்து 74 ஆயிரத்து 822 மோசடி செய்யப்பட்டுள்ளது. வழக்கில் எதிரிகளாக 123 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 50 பேர் கைதாகியுள்ளனர். நிறுவனத்தின் சில சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சொத்துக்கள் மனுதாரர்கள் முதலீடு செய்வதற்கு முன்பே தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்ய இயலாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மோசடி நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய காலவரம்பு நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திரும்பப் பெறும் வகையில் நிறுவன சொத்துக்களை அடையாளம் கண்டு, பறிமுதல் செய்யும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். இதற்கு மதிப்பீட்டுக் குழு, துணைக்குழுவிற்கு போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.