/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆத்தாடி... தென்னை நார்கழிவு விலை ஒரு லோடு ரூ.26 ஆயிரமாம்: கறிக்கோழி வளர்க்கும் பண்ணை விவசாயிகள் புலம்பல்
/
ஆத்தாடி... தென்னை நார்கழிவு விலை ஒரு லோடு ரூ.26 ஆயிரமாம்: கறிக்கோழி வளர்க்கும் பண்ணை விவசாயிகள் புலம்பல்
ஆத்தாடி... தென்னை நார்கழிவு விலை ஒரு லோடு ரூ.26 ஆயிரமாம்: கறிக்கோழி வளர்க்கும் பண்ணை விவசாயிகள் புலம்பல்
ஆத்தாடி... தென்னை நார்கழிவு விலை ஒரு லோடு ரூ.26 ஆயிரமாம்: கறிக்கோழி வளர்க்கும் பண்ணை விவசாயிகள் புலம்பல்
ADDED : செப் 23, 2025 04:26 AM

மதுரை: கறிக்கோழி பண்ணைகளில் பயன்படுத்தப்படும் தென்னை நார் கழிவுகள் விலை அதிகரிப்பால் கோழி உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
பண்ணையில் வளரும் குஞ்சுகளுக்கு விவசாயிகள் உணவு, தண்ணீர் வழங்கி 40, 50 நாட்கள் பராமரிப்பர். லேசான அதிர்வைக் கூட தாங்க இயலாத குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக கோழிகளாக வளர்த்தெடுப்பர். இக்காலத்தில் சாதாரண மண்தரையில், தென்னை நார் கழிவுகளை பரப்பி அதில் நடமாட வைத்து பராமரிப்பர்.
இந்த தென்னை நார் கழிவுகள் தேங்காய் மட்டையில் தும்பை பிரித்தெடுத்து கயிறு தயாரித்த பின் கிடைக்கும் மிச்சமாகும். உரமாகவும் பயன்படும் இவை, சோழவந்தான், நத்தம் பகுதியில் அதிகம் கிடைக்கிறது. குஞ்சுகளுக்கு 'மெத்'தென்ற இதமான உணர்வையும், கதகதப்பையும் அளித்து அவற்றின் சீரான வளர்ச்சிக்கு உதவும்.
இந்த நார் விலை உயர்ந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு டிராக்டர் லோடு ரூ.5 ஆயிரத்துக்கு கிடைத்தது. அதன்பின் படிப்படியாக உயர்ந்து 3 மாதங்களுக்கு முன் ரூ.15 ஆயிரமாகவும், தற்போது ரூ.26 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் பண்ணை விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
விவசாயிகளுக்கு பாதிப்பு
மதுரை மாவட்ட கறிக்கோழி வளர்ப்போர் சங்க ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி கூறியதாவது: கோழிக் குஞ்சுகளை எங்களிடம் பெறும் கம்பெனிகள் இப்போதும் கிலோவுக்கு ரூ.6.50 தான் வழங்குகின்றன. ஒரு பேட்ச் குஞ்சுகளை வாங்கி, வளர்த்து கம்பெனியிடம் விற்றபின், அடுத்த பேட்ச் குஞ்சுகளை வளர்ப்பதற்கு மீண்டும் இந்த தென்னை நார் கழிவுகளை மாற்ற வேண்டும். இதற்கு அதிக செலவு செய்தாலும் குஞ்சுகளை வளர்ப்பதற்கு தரும் விலையில் மாற்றமில்லை. ஆனால் உணவு, மருந்து விலையில் மாற்றம் வந்தால் இறைச்சி, முட்டை விலை மட்டும் அதிகரிக்கிறது.
தொழிலாளர் சம்பளம், மின்சாரம் போன்றவை அதிகரிப்பதோடு இச்செலவும் அதிகரித்துள்ளதால் எங்களுக்கு பாதிப்பு அதிகமுள்ளது. இதுகுறித்து அரசிடமும் முறையிட்டுள்ளோம். அரசு ஏதாவது மானியமோ, ஊக்கத் தொகையோ வழங்கினால் நல்லது என்றார்.