ADDED : மே 31, 2026 10:33 PM
மதுரை: ‘புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பு வழங்க வேண்டும்’ என ஆசிரியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: நடப்புக் கல்வி ஆண்டில் 1 முதல் 3ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3 வரை மூன்று நாள் தொடர் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
வெயில் தாக்கத்தால் கோடை விடுமுறை ஜூன் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு இந்நாட்களில் பயிற்சி அளிக்கப்படுவதால் விடுமுறை நாட்களில் அவர்கள் பங்கேற்க வேண்டியுள்ளது.
எனவே அரசு உத்தரவுப்படி விடுமுறை நாட்களில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்குள் ஈடுசெய்யும் விடுப்பு வழங்க தொடக்க கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
