ADDED : ஜூன் 10, 2026 07:22 PM
மதுரை: தோட்டக்கலை சார்பில் மதுரை மாவட்டத்தில் ஆயிரம் எக்டேரில் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துணை இயக்குநர் பிரபா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பல்லாண்டு பயிர்களான மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை, முருங்கை மற்றும் காய்கறிப் பயிர்களில் சொட்டு நீர், தெளிப்பு நீர்ப்பாசன முறைகளை விரிவுபடுத்தலாம். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் இதன் மூலம் 40 முதல் 60 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
உரப் பயன்பாட்டு திறன் அதிகரித்து உரச்செலவும் குறைகிறது. பயிர்களின் மகசூல், தரம் மேம்படுவதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர்ப் பாசன அமைப்பை உருவாக்கலாம். இத்திட்டத்தில் ஒரு விவசாயி குறைந்தபட்சம் 5 எக்டேர் வரை நுண்ணீர்ப்பாசனத்திற்கு மானியம் பெறலாம். ஏற்கனவே இத்திட்டம் மூலம் பயன்பெற்ற விவசாயிகள் பயனடைந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்தால் மீண்டும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.
