ADDED : ஜூன் 21, 2026 11:33 PM
உசிலம்பட்டி, ஜூன் 22-
கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட சிறுவிளையாட்டு மைதானத்தில் கேலரி, அலுவலக கட்டிடப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மைதானம் அமைக்கும் பணிகள் தாமதமாகிறது.
உசிலம்பட்டி, சீமானுாத்து, கல்லுாத்து பகுதியில் மாணவர்களின் விளையாட்டு மேம்பாட்டுக்காக ரூ. 3 கோடி அரசு நிதியும், ரூ.50 லட்சம் எம்.எல்.ஏ., நிதியும் சேர்த்து ரூ.3.5 கோடியில் சிறு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை 2025 ஜூன் 10 ல், முன்னாள் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
200 மீ., அல்லது 400 மீ., தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, கோ-கோ விளையாட்டு வசதிகளை வடிவமைத்து பணிகள் துவங்கியது. மைதான அலுவலகம், வீரர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், பார்வையாளர் கேலரி, சுற்றுச்சுவர் பணிகளை 2026 ல் பார்வையிட்ட கலெக்டர் பிரவீன்குமார் மைதான வடிவமைப்பு பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.
ஐந்து மாதங்களைக் கடந்த நிலையில் மைதானப்பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. பணிகளை விரைந்து முடித்தால் உசிலம்பட்டி கல்விமாவட்டத்தில் குறுவட்ட, மாவட்ட போட்டிகளை இங்கு நடத்தவும், விளையாட்டு துறையில் ஈடுபடும் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கும் வசதியாக இருக்கும்.
