ADDED : ஏப் 28, 2026 05:26 AM
காங்கேயம் கொங்கு மண்டலத்தின் வீரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அடையாளமாகத் திகழும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், ஓலப்பாளையம் - கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற கண்ணபுரம் மாட்டுச் சந்தை களைகட்டத் தொடங்கியுள்ளது.
வழக்கமாக சித்திரை மாதத் தொடக்கத்திலேயே களைகட்டும் இந்தச் சந்தை, இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் காரணமாகத் தேர்தல் முடிந்த மறுநாளே தொடங்கியது. தேர்தல் பரபரப்பு ஓய்ந்த நிலையில், தற்போது விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இன்னும் பத்து நாட்கள் நடைபெற உள்ள இந்தச் சந்தையில், மாடுகளின் வருகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.
திருப்பூர், பல்லடம், தாராபுரம், பொள்ளாச்சி, கோபி மற்றும் ஈரோடு எனப் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, கம்பீரமான காங்கயம் இனக் காளைகள், ரேக்ளா பந்தயக் காளைகள், கட்டுமஸ்தான வண்டிக் காளைகள், எருதுகள் மற்றும் அதிக பால் தரும் காங்கயம் ரகப் பசுக்கள் எனச் சந்தையே 'கடல்' போலக் காட்சியளிக்கிறது.
சந்தை குறித்து விவசாயிகள் கூறுகையில், 'இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இளம் காளைக் கன்று ஜோடி 25,000 முதல் 55,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு மற்றும் இனப்பெருக்கத்திற்கான தரமான 'பூச்சிகாளை' ஒன்று 3 லட்சம் ரூபாய் வரை விலை போயுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 20 ஆயிரம் மாடுகள் வரை வரும் என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.
பாரம்பரிய முறை
இங்கு மாடுகளின் விலை இன்றும் பழமையான மற்றும் நம்பிக்கையான முறையில் பேசி முடிக்கப்படுவது தனிச்சிறப்பு. வாங்கிய மாடுகளுக்குக் கோவிலில் சிறப்புப் பூஜை செய்த பின்னரே விவசாயிகள் தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதியும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அவசர மருத்துவ உதவிகளுக்கான சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
