ADDED : ஜூன் 22, 2026 03:16 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கலெக்டர் துர்கா, 'உங்களை நீங்களே உணர்வதற்கான பயிற்சிதான் யோகா என, பேசினார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சர்வசேத யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தன.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்வில் கலெக்டர் துர்கா தலைமையில் நடந்தது. எம்.பி., சச்சிதானந்தம், மேயர் இளமதி முன்னிலை வகித்தனர். கலெக்டர் துர்கா பேசுகையில், 'யோகா உடல் தகுதி, மன வலிமை, உணர்ச்சி சமநிலை, நலவாழ்வை மேம்படுத்த செயல் திறன் வாய்ந்த வழிமுறை. குழந்தைகள், இளம் பருவத்தினர், மூத்த குடிமக்கள், பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் யோகா செய்வதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, மனநலப் பிரச்னைகள் உட்பட பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 'உங்களை நீங்களே உணர்வதற்கான பயிற்சிதான் யோகா', என்றார். தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று யோகா, மூச்சுப் பயிற்சி செய்தனர். இதையடுத்து யோக பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் துர்கா, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சிவக்குமார், ஏ.டி.எஸ்.பி., கருணாகரன், கல்லுாரி முதல்வர் தீபா, யோகா மருத்துவ அலுவலர் அம்சலட்சுமி, பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். இதுபோல் தமிழக 14வது பட்டாலியன் என்.சி.சி., சார்பில், மலைக்கோட்டை மைதானத்தில் லெப்டிணென்ட் கர்ணல் நவ்நீத் கணேஷ் தலைமையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக் கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சிகளை செய்தனர்.
திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளிச் செயலர்கள் மங்களராம், காயத்ரி தலைமை வகித்தனர். முதன்மை முதல்வர்கள் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்று யோகா தின முக்கியத்துவத்தை விளக்கினார். அறிவுத்திருக்கோயில் பேராசிரியர்கள் பாலசுந்தர், சங்கரேஸ்வரி, ரங்கநாயகி, சிலம்பரசி பங்கேற்று நினைவாற்றல் மேம்பட யோகா பயிற்சி அளித்தனர். இதில் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் பென்னன்சின்னசாமி முன்னிலை வகித்தார். யோகா மைய பணியாளர்கள், இப்பகுதியில் உள்ள 8 பள்ளிகளின் மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தனர். முன்னாள் இயக்குனர் வெங்கடாசலபதி, யோகா சிறப்பு குறித்து விளக்கினார். உடற்கல்வி இயக்குனர் சுகுமார் வரவேற்றார். மத்திய ஆயுஷ் அமைச்சக நெறிமுறைப்படி, யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கஸ்துாரிபா சேவிகாசிரமம், சிறப்பு மேல்நிலைப் பள்ளி, காந்திகிராமம், சின்னாளபட்டி பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஜெயராஜ் பிராங்க்ளின் நன்றி தெரிவித்தார்.
சாணார்பட்டி: மேட்டுக்கடை பிரம்மா குமாரிகள் ரிட்ரிட் சென்டரில் சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது. இதில் 1500 பொது மக்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் நேர்மறையான எண்ணங்களின் ஆற்றலை உருவாக்கக்கூடிய ராஜயோகம் தியான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தி.மு.க., மாவட்டப் பொருளாளர் விஜயன், ராஜயோகினி பிரம்மா குமாரி உமா, ராஜஸ்தான் ராஜயோகி பிரம்மா குமார் ஜெயக்குமார் தியானம், யோகா பயிற்சி அளித்தனர். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை யோகா பயிற்சி நடந்தது.
