/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுச்சூழலை காக்க மரங்கள் வளர்ப்பு
/
சுற்றுச்சூழலை காக்க மரங்கள் வளர்ப்பு
ADDED : செப் 15, 2025 07:29 AM

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை பகுதியில் வனத்துறை, கிருபா பவுண்டேஷன், கிருபா தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்களை சேகரித்து அப்புறப்படுத்தி சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் தன்னார்வல அமைப்புகள், நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பல வகையான மரங்களை நட்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றன. இதில் ஒன்றாக மாசில்லா ஒட்டன்சத்திரத்தை உருவாக்குவதில் கிருபா பவுண்டேசன் மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறது.
இதன் அடுத்த முயற்சியாக வனத்துறையுடன் இணைந்து -பாச்சலூர் ரோட்டில் வனப்பகுதியை பாழாக்கும் வகையில் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள், மதுப் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றும் பணியை மேற்கொண்டது. அதோடு, ரோட்டின் ஓரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் ஒழிப்பு முகாமை நடத்தி அணைப்பகுதியை சுற்றி இருந்த பிளாஸ்டிக் குப்பைகள், மது பாட்டில்களை சேகரித்து அப்புறப்படுத்தியது.
மரங்களை நடுவது அவசியம் பி.சிவக்குமார், தலைவர், கிருபா தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்:
புவி வெப்பமயமாக்களை தடுப்பதற்கு அதிகமான மரங்களை நடுவது அவசியம். வனப்பகுதியில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மனிதர்களின் செயல்பாடுகள் அமைந்து வருகிறது. வனப்பகுதிக்குள் விசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் விலங்குகள் பாதிப்புக்கு ஆளாகின்றன. இதனை அகற்ற முடிவு செய்தோம். இதற்கு முன்னதாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம். இதனைத் தொடர்ந்து ரோட்டின் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அவ்வப்போது சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச்சூழலை காப்போம்.
பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் எஸ்.சுஜாதா, இயக்குனர், கிருபா பவுண்டேஷன்: வனப்பகுதி வழியாக செல்லும் ரோட்டு ஓரங்களில் மது பாட்டில்களை வீசி செல்வதாலும் மற்றும் கொண்டு போகும் பிளாஸ்டிக் பைகளை போட்டு செல்வதாலும் வனப் பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வனத்துறையுடன் இணைந்து ஒட்டன்சத்திரம் பாச்சலூர் ரோட்டில் வடகாடு ஊராட்சி வரை வனத்துறை செக்போஸ்டில் தொடங்கி ரோட்டின் இரு பக்கங்களிலும் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றும் பணியை செய்தோம்.
இத்துடன் நின்று விடாமல் பரப்பலாறு அணைப்பகுதியில் வீசப் பட்டிருந்த மது பாட்டில்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளை செய்தோம். சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் சந்ததியினர் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி வாழ தேவையான முயற்சிகளை எடுக்க உறுதி மேற்கொள்வோம்.