தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் ஆரவாரமாக தொடங்கியது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி

 திண்டுக்கல்லில் ஆரவாரமாக தொடங்கியது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி

 திண்டுக்கல்லில் ஆரவாரமாக தொடங்கியது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : ஏப் 04, 2026 07:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 07:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:பிளஸ் 2வுக்கு பின் உயர் கல்வியில் எந்த படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பல்வேறு பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் 'தினமலர்', கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மஹாலில் நேற்று ஆரவாரமாக தொடங்கியது. இன்று (ஏப்.,5) நிறைவுகிறது.

மிக பிரமாண்டமாய், புத்தம் புதிய சிந்தனைகளோடும், 'ஏஐ' யுக கனவுகளை நனவாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் கருத்தரங்கு நிகழ்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி டீன் ராஜன், கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மணிமாறன், அமிர்த விஸ்வ வித்யா பீடம் முதல்வர் பகவதி பெருமாள், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்தினராஜ், மாணவி கமலி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

தமிழகத்தின் முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள், உயர்தர பள்ளிகளின் அரங்குகளை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி டீன் ராஜன், கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மணிமாறன், அமிர்த விஸ்வ வித்யா பீடம் முதல்வர் பகவதி பெருமாள், நாலேஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார், தினமலர் விளம்பர மேலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

முதல் நாளிலேயே கல்வி அரங்குகளில் மாணவர்கள், பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்து கல்லுாரிகள், படிப்புகள் குறித்த தகவல்களை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். காலை அமர்வு கருத்தரங்கில் வல்லுநர்கள் பேசியதாவது:

* வேலைவாய்ப்பு தரும்'இன்ஜினியரிங்' படிப்புகள்

டேவிட் ரத்தினராஜ், முதல்வர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி:

அனைத்து பொறியியல் படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. நீங்கள் எந்த பொறியியல் படிப்புகளை தேர்வு செய்தாலும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக கோர் இன்ஜி., படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு கிரியேட்டிவ் சிந்தனைகள், தீர்வுகளை கண்டறியும் உணர்வுகள் இருத்தல் வேண்டும். மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், இ.இ.இ., இ.சி.இ., சைபர் செக்கியூரிட்டி போன்ற படிப்புகளுடன் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேவையான தொழில் நுட்பத் திறன் சார்ந்த கூடுதல் படிப்புகளை படித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் ஏ.ஐ., பயன்பாடு, டேட்டா சயின்ஸ், ஆட்டோமேஷன் தொழில்நுட்ப பாடங்களை படிக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு தேவையான பாடங்களை கற்றுத்தரும் கல்லுாரிகள், படிப்புகளை படிக்க முன்வர வேண்டும்.

* எவர் கிரீனாக நிர்வாக படிப்புகள்

ராஜன், டீன், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி:

படிப்பை விட கல்லுாரியை தேர்வு செய்வதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். என்.ஐ.ஆர்.எப்., ரேங்க், நாக் கிரேடு பெற்றுள்ளதா, அந்த கல்லுாரியில் முந்தைய ஆண்டுகளின் 'பிளேஸ்மெண்ட்' எப்படி இருந்தது ஆகியவற்றை கவனிக்க வேண்டும். நிர்வாகப் படிப்புகளில் முக்கியமானது மேலாண்மை வணிகவியல் படிப்புகள். தேசிய அளவில் இப்படிப்புகள் 15 ஆயிரம் கல்லுாரிகளில் உள்ளன. இதில் 'டாப் 50' கல்லுாரிகளை தேர்வு செய்யலாம். தன்னாட்சி கல்லுாரிகள் தனித்துவமான பாடத் திட்டங்களை கொண்டுள்ளன. அதில் ஏ.ஐ., சார்ந்த தொழில்நுட்ப பாடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

பாடத் திட்டங்கள் தொழில் நிறுவனங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். படிக்கும்போதே அதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பி.பி.ஏ., பி.காம்., சி.ஏ., பேங்கிங் மேனேஜ்மெண்ட், பிசினஸ் சால்விங் சிஸ்டம் தொடர்பாக படிக்கலாம். பி.பி.ஏ., படித்தால் எம்.பி.ஏ., படித்துவிட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் பி.பி.ஏ., பி.காம்., முடித்தவர்கள் ஆடிட்டிங் துறையில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் தயாராக இருக்கின்றன. உங்கள் திறமைகளுக்கு வாய்ப்புக் கொடுக்கும் சிறந்த கல்லுாரிகளாக தேர்வு செய்யுங்கள். படிக்கும்போது கூடுதலாக சர்டிபிகேட் கோர்ஸ்களை முடியுங்கள். மூன்று ஆண்டுகளை நீங்கள் அர்ப்பணித்தால் நல்ல எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கின்றது.

* உலகம் சுற்ற படிக்கலாம்கடல்சார் படிப்புகள்

'மரைன் கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மெண்ட்' குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் சுரேஷ்குமார் பேசியதாவது:

பிளஸ் 2வுக்கு பின் வழக்கமான கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் படிப்புகளை தாண்டி வித்தியாசமாக படிக்க நினைத்தால் கடல்சார் கேட்டரிங் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளை தேர்வு செய்யலாம். இப்படிப்புகளை படித்தவுடன் வேலைவாய்ப்பு தாராளமாக கிடைக்கின்றன. மதுரையில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் இப்படிப்பு உள்ளது. 90 சதவீதம் பிராக்டிக்கல் வகை படிப்பு இது. பிளஸ் 2 வில் 60 சதவீதம் மதிப்பெண் போதும். உடற்தகுதி இப்படிப்புக்கு மிக முக்கியம். உலகம் முழுவதும் சுற்றிவரும் வாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசு வேலைவாய்ப்புகள், சுற்றுலா துறைகளில் ஸ்டார் ஓட்டல்கள், ஹெல்த் டிபார்ட்மெண்ட், ஏர்லைன், ஐ.டி., சர்வீஸ் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இப்படிப்புகளை தேர்வு செய்வதை விட தரமான, முழு கட்டமைப்பு உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். 3 ஆண்டுகள் இப்படிப்பு படித்தவுடன் ரூ.85 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். சில மாதங்களில் ரூ.ஒன்றரை லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

* செமி கண்டக்டர் பொறியாளருக்குஅதிக தேவை ஏற்படும்

'எதிர்கால தொழில்நுட்பங்கள்' குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:

மாற்றம் ஒன்றே மாறாதது. இது பொறியியல் தொழில்நுட்பத்திற்கு மிகவும் ஏற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பின் படித்துவிட்டு வெளியேறும்போது அப்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட அனைத்து பொறியியல் படிப்புகளுக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. அதேநேரம் அப்படிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன, அதற்கான கூடுதல் திறமைகளை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்லுாரிக்குள் நுழையும் போது, படித்து முடித்து வெளியே வரும் போது என்ன தொழில்நுட்பம் இருக்கும் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது நாம் படிக்கும் ஏ.ஐ., பாடங்களுக்கும், தொழிற்சாலை திறமைகளுக்கும் சம்பந்ததே இல்லை. தற்போது 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தை தாண்டி தற்போது 'ஓ.ஐ.,' (ஆர்க்கனைஸ்டு இன்டலிஜென்ட்), 'டேட்டா சயின்ஸ்' யை தாண்டி 'சிந்தட்டிக் டேட்டா சயின்ஸ்' போன்ற தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. தற்போது 'இன்பினிட் ஏ.ஐ.,' தொழில்நுட்ப காலம் துவங்கிவிட்டது. தற்போது செமி கண்டக்டர் இன்டஸ்ட்ரிக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது. இதுதொடர்பான படிப்புகளை தேர்வு செய்யுங்கள். இன்னும் 5 ஆண்டுகளில் நாட்டில் 12 லட்சம் செமி கண்டக்டர் பொறியாளர்கள் தேவைப்படுவர். கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் பாதுகாப்பு, எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல் என அனைத்து பொறியியல் துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது. * புதுமை செய்பவர்களேஉலக ஆளப்போகின்றனர்

'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' என்ற தலைப்பில் மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி டில்லி பாபு பேசியதாவது:

புதுமை செய்பவர்களே இந்த உலகை ஆளப்போகிறார்கள். பிளஸ் 2 வுக்கு பின் எந்த துறையிலும் படித்து பட்டம் பெற்றாலும் அந்த படிப்புகளுக்கான பின்புலத்தின் உள்ள புதுமைகளை கண்டறியுங்கள். புதிய சிந்தனை உள்ளவர்கள் விஞ்ஞானிகளாக ஜொலிக்கலாம். பி.இ., எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல் உள்ளிட்ட படிப்புக்கு பின் 'செட்' (சயின்டிஸ்ட் என்ட்ரன்ஸ் டெஸ்ட்) டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாகலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அந்தஸ்துக்கு இணையானவர்கள் விஞ்ஞானிகள். இந்தியாவில் விஞ்ஞானியாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. விஞ்ஞானிகளுக்கு இன்றும் ரோல் மாடலாக இருப்பவர், அப்துல் கலாம். ஆர்வம், உழைப்பு இருந்தால் டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாகலாம். ஏ.ஐ.சி.டி.இ.,, யு.ஜி.சி.,யின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் 'கேட்' 'செட்' தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று விஞ்ஞானியாக தேர்வு பெறலாம்.

இதுதவிர இஸ்ரோ, அறிவியல் தொழில்நுட்பம், அணுசக்தி துறைகளிலும் பணிவாய்ப்பு பெறலாம். சாதிக்க வேண்டும் என எண்ணம் உள்ளவர்கள் அதற்காக பிரத்யேகமாக உழைக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், வேளாண்மை என எந்த படிப்புகளை படித்தாலும் புதுமையாக சிந்திக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மெக்கானிக், சிவில், இ.சி.இ., ஏரோ ஸ்பேஸ், சி.எஸ்., ஐ.டி., கெமிக்கல் இன்ஜி., உள்ளிட்டவை படித்தால் டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாக ஆகும் வாய்ப்பு உள்ளது.

* டிஜிட்டல் மார்க்கெட்டிங்பணிக்கு அதிகரிக்கும் தேவை

'டிஜிட்டல் மார்க்கெட்டிங், வணிகம்' குறித்து மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் இயக்குநர் சுப்பிரமணியன் பேசியதாவது:

உயர் கல்வியில் சேரும்போது பெரும்பாலும் அறிவியல், கலை, பொறியியல் படிப்புகளை தான் தேர்வு செய்கின்றனர். அதை தாண்டி பல்வேறு வித்தியாசமான படிப்புகள் உள்ளன. 2030 ல் என்ன தொழில்நுட்பம் தேவை என்பதை தெரிந்து அதற்கேற்ற படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில், அறிவியல், பொறியியல் அல்லாத டிஜிட்டல் மார்க்கெட்டிங், டிஜிட்டல் பேங்கிங், பின்டெக் துறை படிப்புகளை தேர்வு செய்யலாம்.

கூகுள் இன்ஸ்டா, யூ டியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் பொருட்கள், சேவைகளை விளம்பரப்படுத்தும் பணிகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு முடித்தோர் அதிகம் தேவையாக உள்ளனர். டிஜிட்டல் பேங்கிங், பின்டெக் துறைகளில் பி.காம்., பி.பி.ஏ., படிப்புகளுடன் அவைசார்ந்த ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை படித்து, டிஜிட்டல் விளம்பர துறைகளில் சாதிக்கலாம். இப்படிப்புகளை முடித்தால் ரூ.4 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளம் பெறும் வாய்ப்பு கிடைக்கும். இதுதவிர வீட்டில் இருந்தே டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து சம்பாதிக்கலாம்.

* ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ.,

அமிர்த விஸ்வ வித்யா பீடம் முதல்வர் பகவதி பெருமாள் பேசியதாவது:

பிளஸ் 2 படித்த பின் அடுத்து படிக்க போவது உங்கள் வாழ்க்கையை மாற்றும் காலம். 'நீங்கள் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆவாய்' என்பதற்கு ஏற்ப உயர்கல்வியை உங்களுக்கு பிடித்த படிப்பை தேர்வு செய்யுங்கள். தற்போது நம்மை டிஜிட்டல் உலகம் ஆளுகிறது. எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் இதன் தாக்கம் அதிகரிக்கும். கலை, அறிவியல், பொறியாளர், மருத்துவர் என என்ன படித்தாலும், படிப்பு சார்ந்த அப்போதைய தொழில்நுட்பங்களையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் அதற்கான கூடுதல் படிப்புகளை சேர்த்து படித்தால் மட்டுமே போட்டிகளை எதிர்கொள்ள முடியும். தற்போது அனைத்து துறைகளிலும் ஏ.ஐ., தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் இத்தொழில்நுட்பம் 'அப்டேட்' ஆகிக் கொண்டே இருக்கும். அதற்கேற்ற திறமைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

* வேலை தரும் படிப்புகள்

கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:

அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் குறித்து நமக்கு போதிய விழிப்பணர்வு இல்லை. ஆனால் அக்ரிகல்சர், பிஷரிஸ், பாரஸ்ட்டரி, செரிக்கல்சர் போன்ற படிப்புகளுக்கு 'இந்தியன் கவுன்சில் பார் அக்ரிகல்சர் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' எழுதலாம். இதன்மூலம், மாநில கவுன்சிலிங்கில் கிடைக்காத இடத்தை அகில இந்திய இடஒதுக்கீட்டில் பெறும் வாய்ப்பு கிடைக்கும். இதுபோல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு டூரிசம், ஸ்போர்ட்ஸ், நாட்டிக்கல் சயின்ஸ், மரைன், லாஜிஸ்டிக் அன்ட் ஷிப்பிங், உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் உள்ளன.

ஜே.இ.இ., நீட் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமென்றால் பிளஸ் 1, பிளஸ் 2 ல் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை நன்கு படித்துவைத்துக்கொள்ளுங்கள். ஐ.ஐ.டி.,யில் சேரும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிரச்னைகளுக்கான தீர்வுகாணும் திறன், ஆப்டிடியூட் ஸ்கில்ஸ், ஆங்கில புலமை ஆகியவற்றை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இவையின்றி வெற்றி பெறுவது கடினம். ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பு எளிதாகும். பொறியியல் பிரிவு படிப்புகளை தேர்வு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள கட்டமைப்புகளை ஆய்வு வேண்டும்.

இவ்வாறு பேசினர்.

இன்றும் கல்வி நிறுவனங்களின் கண்காட்சி, கருத்தரங்கு நடக்கிறது.

இந்நிகழ்ச்சி பவர்டு பை: கோவை ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யாபீடம். இணைந்து வழங்குபவர்கள்: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,), சேலம் நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. ஆடியோ பார்ட்னர் இன்போ பஸ்.

----* வாட்ச், டேப்லெட், லேப்டாப் பரிசு

கருத்தரங்கு காலை அமர்வில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை எழுதிய திண்டுக்கல் நிவேதிதா, மரியஷாலினி, பிரித்திகா, நிதிஷ்வரன், ஹேமவர்ஷினி ஆகியோர் ஸ்மாரட் வாட்ச், திண்டுக்கல் கலையரசன் டேப்லெட் பரிசு வென்றனர்.மாலை அமர்வில் திண்டுக்கல் வைஷ்ணவி, மிதுன், ேஷாபிகா எலிசபெத், முத்துச்செல்வி, தர்மசம்வர்த்தினி ஆகியோர் ஸ்மார்ட் வாட்ச், திண்டுக்கல் சுஜித்குமார் டேப்லெட், குருபிரசாந்தன் லேப்டாப் பரிசு வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us