கேள்விக்குறியாகும் பட்டுக்கூடு விவசாயம் உற்பத்தியில் பின்னுக்கு தள்ளப்பட்டதால் கவலை
கேள்விக்குறியாகும் பட்டுக்கூடு விவசாயம் உற்பத்தியில் பின்னுக்கு தள்ளப்பட்டதால் கவலை
ADDED : ஜூன் 15, 2026 11:07 PM

தொப்பம்பட்டி; பட்டு வளர்ச்சித்துறை ஒத்துழைப்பு இல்லாததால் பட்டுக்கூடு வளர்ப்பு விவசாயிகள் தொழிலை விட்டு வெளியேறுவதாக தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.
பழநி தொப்பம்பட்டியில் நடந்த பட்டுக்கூடு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
பட்டுக்கூடு விவசாயம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இரண்டு மாதங்களாக பட்டுப்புழு வளர்ச்சியில் தோல்வி அடைந்து மல்பெரி செடிகள், பட்டுக்கூடுகளை எரிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பத்து சதவீத விளைச்சல் கூட எடுக்க முடியாமல் உள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை பட்டு வளர்ச்சித்துறை செவி சாய்க்காமல் உள்ளது. தரம் இல்லாத முட்டைகளால் தான் பாதிப்பு ஏற்படுகிறது என்று பல ஆண்டுகளாக குறிப்பிட்டு வருகிறோம்.
மல்பெரி செடியில் இலை முடிச்சு பேன், குருத்தடிப்புழு நோய் தாக்குதல் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளோம். இவற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒட்டுண்ணிகள் வாங்க முடியாத நிலைக்கு உள்ளோம்.
இரண்டு ஆண்டுகளாக இன்சூரன்ஸ் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் இத்தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படுகிறது. பட்டு வளர்ச்சித்துறை குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் பட்டு வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த சமூகம் தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பட்டு வளர்ச்சித்துறை விவசாயிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
