ADDED : ஏப் 14, 2026 07:19 PM
வடலுார்: தி.மு.க., நிர்வாகி மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, இரு தினங்களுக்கு முன் வடலுாரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார். அவர் வருகையை முன்னிட்டு வடலுார் நகர தி.மு.க.,வினர் மற்றும், கூட்டணி கட்சியினர் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
துணை முதல்வர் உதயநிதி பிரசார வேன் வடலுார் பகுதியை நெருங்கி நுழைந்ததும், தி.மு.க.,வினர் சார்பில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, வான வேடிக்கை நடந்தது. முறையான அனுமதி இன்றி, தேர்தல் நடைமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசுகள் வெடித்து, வான வேடிக்கைகள் வெடித்த குற்றத்திற்காக, வடலுார் போலீசார் நகர தி.மு.க., செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வழக்குப் பதிந்தனர்.
