/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஊராட்சிகளை தரம் உயர்த்துவது கேள்விக்குறி
/
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஊராட்சிகளை தரம் உயர்த்துவது கேள்விக்குறி
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஊராட்சிகளை தரம் உயர்த்துவது கேள்விக்குறி
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஊராட்சிகளை தரம் உயர்த்துவது கேள்விக்குறி
ADDED : செப் 23, 2025 10:47 PM

சூலுார்; ஊராட்சிகளை நகராட்சி, மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டம், சட்டசபை தேர்தல் நெருங்குவதால் கேள்விக்குறியாக உள்ளது.
ஊராட்சிகளை பேரூராட்சிகள் ஆகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் மற்றும் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தவும், ஊராட்சிகளை அருகில் உள்ள நகர்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவுசெய்தது.
இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, கடந்தாண்டு, பிப்., மாதம் மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டது. சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு, வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுக்க, 371 ஊராட்சிகள், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.அதில், கோவை மாவட்டம் சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலம்பூர், சின்னியம்பாளையம், மயிலம் பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளும், இருகூர் உள்ளிட்ட பேரூராட்சிகள் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி, பேரூராட்சி மக்கள் பல போராட்டங்களை நடத்தினர். கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஊராட்சிகளை இணைக்கவும், தரம் உயர்த்தவும் ஊரக வளர்ச்சித்துறை சார்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
சம்மந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் தங்கள் ஆட்சேபனைகளை, 120 நாட்களுக்குக்குள் தெரிவிக்கலாம், என, நகர்புற வளர்ச்சித்துறை தெரிவித்திருந்தது. பலரும் தங்கள் ஆட்சேபனைகளை கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தனர்.
120 நாட்கள் முடிந்தது
கடந்த, ஜன., மாதம் பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம், என, அறிவிக்கப்பட்டது. குறித்த காலம் முடிந்து, ஐந்து மாதங்கள் முடியும் நிலையில், இத்திட்டம் தொடர்பாக தெளிவான அறிவிப்பு ஏதும் இதுவரை வரவில்லை. மேலும், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் எந்தவித புது வளர்ச்சி பணிகளையும் துவங்க வேண்டாம், என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த ஊராட்சிகளில் பணிகளை செய்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கேள்விக்குறி
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கான எந்தவொரு பூர்வாங்க பணிகளும் இதுவரை துவங்கவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இணைப்பு பணி மேற்கொண்டால், அது தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், தற்போது, இருக்கும் நிலையே நீடிக்கட்டும், என, அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் தான், இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன், இணைப்பு பணிகள் நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.