/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலு வழிபாட்டால் மனதில் தவழும் அமைதி! விதவிதமாக அமைத்து பிரமிக்க வைக்கும் 'தினமலர்' வாசகியர்
/
கொலு வழிபாட்டால் மனதில் தவழும் அமைதி! விதவிதமாக அமைத்து பிரமிக்க வைக்கும் 'தினமலர்' வாசகியர்
கொலு வழிபாட்டால் மனதில் தவழும் அமைதி! விதவிதமாக அமைத்து பிரமிக்க வைக்கும் 'தினமலர்' வாசகியர்
கொலு வழிபாட்டால் மனதில் தவழும் அமைதி! விதவிதமாக அமைத்து பிரமிக்க வைக்கும் 'தினமலர்' வாசகியர்
ADDED : செப் 25, 2025 12:42 AM

கோவை:நவராத்திரியை முன்னிட்டு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், வாசகர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கொலுவை பார்வையிட்டு, பரிசு வழங்கி, கவுரவிக்கப்படுகிறது. மூன்றாவது நாளாக நேற்று கோவை ராம்நகர், சித்தாபுதுார், பாப்பநாயக்கன்பாளையம், சிவானந்தா காலனியில் ஒரு பகுதிக்கு 'தினமலர்' குழுவினர் சென்றனர்.
பல்வேறு வடிவங்களில் கொலு பொம்மைகளை வாசகியர் வைத்திருந்தனர். தெய்வீக பொம்மைகள் இடம்பெற்றிருந்தாலும், பாரம்பரிய கலைகளை பிரதிபலிக்கும் பொம்மைகளும் அதிகளவில் இருந்தன. திருச்செந்துார் முருகன் கோயில், காவடி கொலு அமைப்பு, பாகவதர்கள், முருகன் திருக்கல்யாணம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம் என, பாரம்பரிய கலைகள் அடங்கிய பொம்மைகள் கவர்ந்தன.
காயத்ரி, அன்சாரி வீதி, ராம்நகர்: நவராத்திரி வந்தால், எங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி துவங்கி விடும். கொலு வைப்பதற்காக பார்த்து பார்த்து அனைத்தையும் தயார் செய்வோம். நவராத்திரி கொலுவில் அஷ்டலட்சுமி பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். கொலு வைப்பதால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
ரம்யா, ராம் நகர்: எனது தாயார், கொலு வைக்க கற்றுத்தந்தார். 50 ஆண்டுகளாக கொலு வைத்து வருகிறோம். பொம்மைகளை பாதுகாப்பாக எடுத்து, வரிசையாக அடுக்குவதே சிறப்பு. வள்ளலார், குறவர் உள்ளிட்ட பொம்மைகளை பல ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்துள்ளோம். மீனாட்சி அம்மன் கோயிலின் பொற்றாமரை குளம், சிவன் கோயில், கையால் செய்யப்பட்ட பொம்மைகள் என, பல தரப்பட்ட பொம்மைகளை வைத்துள்ளோம். இது, மனதுக்கு திருப்தி தருகிறது.
மங்கலம், ராம் நகர்: ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது. குறிப்பாக கல்யாண செட் பொம்மைகளை வைக்கும்போது, மகிழ்ச்சி கிடைக்கிறது. பெண் குழந்தைகள் சிறப்பாக இருக்க கொலு வைக்க வேண்டும். எங்களது கொலுவில் சயன விநாயகர் சிலை பிரத்யேகமானது. கடந்த காலங்களில் அதிகளவு பொம்மைகள் வைத்தோம். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட பாரம்பரிய பொம்மைகளை ஒவ்வொரு ஆண்டும் இடம் பெறச் செய்கின்றோம்.
மதுசஞ்சனா, ராம் நகர்: சிறு வயது முதல் கொலு வைப்பதில் அதிக ஆர்வம் உள்ளது. துவக்கத்தில் பொம்மைகள் என்பதால் ஆர்வம் இருந்தது. தற்போது கொலு வைப்பதன் நோக்கம், அவற்றை எப்படி வைப்பது, பராமரிப்பது, ஆன்மிகம் உள்ளிட்ட பல விஷயங்களை தெரிந்து கொண்டதால், ஆர்வம் அதிகரித்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் செல்வதே தெரிவதில்லை.
பாண்டுரங்கன், ருக்மணி பொம்மைகள் மிகவும் பிடித்தமானவை. இந்தாண்டு சபரிமலை, பீளமேடு ஆஞ்சநேயர், சீதையின் தோழி பொம்மைகள் பிரத்யேகமானவை
சரஸ்வதி, டாக்டர் சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர்: 1960 முதல் கொலு வைத்து வருகிறேன். எனக்கு 83 வயதாகிறது. அன்று முதல் கொலு வைப்பதில் உள்ள ஆர்வம் குறையவில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை கொலு வைக்கும் நாட்களில் ஆர்வமாக வருகின்றனர். காமதேனு, ஐயப்பன் கோயில் உள்ளிட்டவை எங்கள் கொலுவில் பிரத்யேகமானவை. ஒவ்வொரு முறை கொலு வைக்க முயலும்போது ஆர்வம் அதிகமாகிறது. மகிழ்ச்சி ஏற்படுகிறது.
ஜெயந்தி, ராமர் கோவில் வீதி, ராம்நகர்: எங்கள் கொலுவில் எப்போதும் புதிய பொம்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இந்தாண்டு சீன தலையாட்டி பொம்மைகள், ஆழ்வார் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. மனுநீதிச் சோழன், கிரிக்கெட் விளையாட்டு பொம்மைகள் வைத்துள்ளோம்.
கொலு வைப்பதால் கஷ்டமின்றி மகிழ்ச்சி நிலைத்துள்ளது. விளக்கு வைத்து பூஜை செய்வதால், மனதில் அமைதி ஏற்படுகிறது. உறவினர்கள், நண்பர்கள் கொலு பார்க்க வரும்போது, மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கரம் கோர்ப்பவர்கள் 'தினமலர்' நாளிதழுடன் இந்நிகழ்ச்சியை, மெடிமிக்ஸ், மேளம், ரெஜூ ஆயூர், லயா காபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.