/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலத்தடி நீர் மட்டம் உயர 'ஸ்பான்ஞ்'! : நீரியல் நிபுணர்கள் ஐடியா
/
நிலத்தடி நீர் மட்டம் உயர 'ஸ்பான்ஞ்'! : நீரியல் நிபுணர்கள் ஐடியா
நிலத்தடி நீர் மட்டம் உயர 'ஸ்பான்ஞ்'! : நீரியல் நிபுணர்கள் ஐடியா
நிலத்தடி நீர் மட்டம் உயர 'ஸ்பான்ஞ்'! : நீரியல் நிபுணர்கள் ஐடியா
UPDATED : செப் 16, 2025 07:07 AM
ADDED : செப் 15, 2025 11:36 PM

கோவை; மழை நீரை வீணாக்காமல் நிலத்தடிக்குள் செலுத்த தேவையான, கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது போல், நகரம் முழுவதும் இதற்கான 'ஸ்பாஞ்ச்' அமைப்பை ஏற்படுத்தினால், மழைநீர் வடிகட்டப்பட்டு கீழே செல்லும்; நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என்று, நீரியல் நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் (கோவை கிளை) சார்பில், கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பொறியாளர் இல்லத்தில், பொறியாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்தாண்டுக்கான சீர்மிகு மூத்த பொறியாளர் விருது, பொதுப்பணி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நடராஜன், மல்லிகேஸ்வரன், ஆறுமுகம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூத்த பொறியாளர்கள் ஞானகந்தசாமி, அல்போன்ஸ் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
விருது வழங்கி, நீரியல் நிபுணர் சக்திவேல் பீமராஜா பேசியதாவது:
காலநிலை மாற்றத்தால் மழை, வெயில் தாக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்கிறது. இவை குளத்துக்குச் செல்கிறது. நீர் தேக்க வசதி இல்லாததால், வீணாக கடலில் கலப்பது வேதனைக்குரியது.
தற்போது, 300 மி.மீ., மழை பெய்தாலே நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மழை நீரை வீணாக்காமல் நிலத்தடிக்குள் செலுத்த வேண்டும். அதற்கேற்ற கட்டமைப்புகளை நகரங்களில் ஏற்படுத்த வேண்டும்.
நிலத்துக்குள் தண்ணீர் செல்லும் வகையில், 'ஸ்பாஞ்ச்' அமைப்பை ஏற்படுத்தினால், மழைநீர் வடிகட்டப்பட்டு கீழே சென்று, நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். ரேஸ்கோர்ஸ் போன்ற இடங்களில், இக்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ஏற்படுத்துவது அவசியம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
'காலநிலை மாற்றம்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சங்கத்தின் கோவை கிளை தலைவர் இளங்கோவன், செயலாளர் அருள்பிரகாசம் உட்பட பலர் பங்கேற்றனர்.
'ஸ்பான்ஞ்' எப்படி அமைக்க வேண்டும்?
கோவை பொதுப்பணித்துறை முன்னாள் செயற்பொறியாளர் இளங்கோவன் கூறுகையில், ''ஸ்பான்ஞ் அமைப்பு என்பது, பிளாஸ்டிக் கழிவு பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இதை, 'இக்கோ பிளாக்' என்கிறார்கள். தண்ணீர் தேங்கும் இடங்களில், 3 மீட்டர் ஆழத்துக்கு தோண்டி, முதலில் ஜல்லி, பின் 'இக்கோ பிளாக்' வைக்க வேண்டும். இவற்றை, 10 மீ., ஆழத்தில் மண்ணுடன் இணைக்குமாறு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். இந்த மொத்த அமைப்பும், நீரை வடிகட்டி மண்ணின் உள்ளே செலுத்துகிறது. ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்ட பகுதியில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் தண்ணீர் தேங்குவது பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது,'' என்றார்.