/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி கூட்டம்: 20 நிமிடத்தில் 98 தீர்மானங்கள் 'பாஸ்' : பேசுவதற்கு நேரம் ஒதுக்காததால் புலம்பல்
/
நகராட்சி கூட்டம்: 20 நிமிடத்தில் 98 தீர்மானங்கள் 'பாஸ்' : பேசுவதற்கு நேரம் ஒதுக்காததால் புலம்பல்
நகராட்சி கூட்டம்: 20 நிமிடத்தில் 98 தீர்மானங்கள் 'பாஸ்' : பேசுவதற்கு நேரம் ஒதுக்காததால் புலம்பல்
நகராட்சி கூட்டம்: 20 நிமிடத்தில் 98 தீர்மானங்கள் 'பாஸ்' : பேசுவதற்கு நேரம் ஒதுக்காததால் புலம்பல்
ADDED : செப் 30, 2025 10:21 PM

வால்பாறை:
வால்பாறை நகராட்சி கூட்டத்தில், 20 நிமிடங்களில், 98 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
வால்பாறை நகராட்சி சாதாரணக்கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொ) குமரன், துணைத்தலைவர் செந்தில்குமார், பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வால்பாறை நகராட்சியில் கடந்த ஆறு மாதங்களாக மன்றக்கூட்டம் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 12:30 மணிக்கு தான் கூட்டம் துவங்கியது.
கூட்டத்தில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டம் துவங்கியதும், கவுன்சிலர்கள் செல்வக்குமார், அன்பரசு, மணிகண்டன், மகுடீஸ்வரன் ஆகியோர் வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் ஏற்கனவே நடந்த முறைகேடுகள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றனர்.
கமிஷனர்: நகராட்சியில் ஏற்கனவே நடந்தவை குறித்து தற்போது பேசவேண்டாம். இனி நடைபெறவுள்ள வளர்ச்சிப்பணிகள் குறித்து மட்டும் பேசுங்கள்.
பொதுமக்களின் நலன் கருதி அனைத்து வார்டுகளிலும் பணிகள் விரைவில் துவங்கப்படும். வளர்ச்சிப்பணிகள் நடைபெற கவுன்சிலர்கள் முழுஒத்துழைக்க வேண்டும்.
தலைவர்: வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் செய்ய வேண்டியதை கவுன்சிலர் கடிதம் வாயிலாக வழங்கினால், கமிஷனர், பொறியாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்த பின், வார்டுகளில் பணிகள் துவங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில், மொத்தம் உள்ள, 99 தீர்மானத்தில் ஒரு தீர்மானத்தை தவிர மீதமுள்ள தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் பேச முற்பட்ட போது, மன்றக்கூட்டம் நிறைவடைந்ததாக கூறி தலைவர் எழுந்து சென்றார். இதனால், சில கவுன்சில்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் பிரச்சனை குறித்து பேச முடியாமல் புலம்பினர்.
நகராட்சி கூட்டம், மதியம், 12:30 மணிக்கு துவங்கி, 12:50 மணிக்கு நிறைவடைந்தது. 20 நிமிடத்தில், 98 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
ஆறு மாதங்களுக்கு பின் வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற மன்ற ஒப்புதல் வழங்கியதால், அதிகாரிகளும் நிம்மதியடைந்தனர்.