ADDED : மே 31, 2026 04:52 AM

கோவை:நில பிரச்னைகள் தொடர்பாக, தாங்களே தகவல்களை திரட்டி தீர்வு காணும் வகையில், நில ஆவணங்களை பதிவிறக்கம் செய்யும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர்.
தற்போது ஆன்லைன் வாயிலாக கணினி வழி புலப்படம் மற்றும் 'அ' பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவிறக்க, ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு நாளைக்கு 8 ஆவணங்கள் மட்டுமே என்ற வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு நில பிரச்னை என்று வரும்போது, முழு விபரங்களையும் சரிபார்க்க 15 முதல் 20 ஆவணங்கள் வரை பதிவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. இந்த 8 ஆவணங்கள் என்ற கட்டுப்பாட்டால், நாள்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இ---சேவை மையங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி., பெற்று பதிவிறக்கும் போது, அடிக்கடி ஏற்படும் சர்வர் கோளாறுகளால் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவணங்களை ஒரே நேரத்தில் எடுக்க முடிவதில்லை என்கின்றனர் விவசாயிகள் சிலர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் ரங்கநாதன் கூறுகையில், ''தினமும் 8 ஆவணங்கள் மட்டுமே பதிவிறக்க முடியும் என்ற விதிமுறைக்கு மாற்றாக, வாரத்திற்கு 56 ஆவணங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யும் மென்பொருளில் நெகிழ்வுத்தன்மை வேண்டும். இதன் வாயிலாக அவசரத் தேவைக்கு ஒரே நாளில் அனைத்து ஆவணங்களையும் பெற முடியும், என்றார்.
அதிரடி மாற்றங்கள் செய்து மக்களின் வரவேற்பை பெற்று வரும் தமிழக முதல்வர் விஜய் பார்வைக்கு, இது தொடர்பான மனுவை விவசாயிகள் சங்கத்தினர் அனுப்பி காத்திருக்கின்றனர்.
