/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியினரை பந்தாடும் வனத்துறை அதிகாரிகள்: வனத்தில் வசித்தாலும்... இவர்களும் மனிதர்களே!
/
பழங்குடியினரை பந்தாடும் வனத்துறை அதிகாரிகள்: வனத்தில் வசித்தாலும்... இவர்களும் மனிதர்களே!
பழங்குடியினரை பந்தாடும் வனத்துறை அதிகாரிகள்: வனத்தில் வசித்தாலும்... இவர்களும் மனிதர்களே!
பழங்குடியினரை பந்தாடும் வனத்துறை அதிகாரிகள்: வனத்தில் வசித்தாலும்... இவர்களும் மனிதர்களே!
UPDATED : அக் 21, 2025 06:49 AM
ADDED : அக் 20, 2025 11:50 PM

வால்பாறை: வால்பாறை அருகே, பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வால்பாறையில், கல்லார்குடி, சங்கரன்குடி, உடுமன்பாறை, பாலகணாறு, நெடுங்குன்றம் உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட் பகுதிகளில், காடர், முதுவர், மலசர், புலையர் போன்ற பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் பகுதியில், ரோடு, மின்சாரம், நடைபாதை, வீடுகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. இதனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை, தொட்டில் கட்டி (டோலி) துாக்கி செல்லும் அவல நிலை இன்றும் நீடிக்கிறது.
குறிப்பாக, உடுமன்பாறை, சங்கரன்குடி, பாலகணாறு ஆகிய செட்டில்மென்ட் பகுதியில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் நோயாளிகளை பழங்குடின மக்கள், இரண்டு கி.மீ., துாரம் வரை தொட்டில் கட்டி துாக்கி வரவேண்டிய நிலை உள்ளது.
அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளை கூட அதிகாரிகள் செய்துதருவதில்லை. செட்டில்மென்ட் பகுதி முழுவதும் காப்புக்காடு என கூறி பழங்குடியின மக்களை, அங்கிருந்து வெளியேற்றுவதிலேயே வனத்துறை அதிகாரிகள் குறியாக உள்ளனர்.
ரோட்டுக்கு அளந்து5 ஆண்டுகளாச்சு பழங்குடியின மக்கள் 'தினமலர்' நிருபரிடம் கூறியதாவது:
மணிகண்டன், உடுமன்பாறை: அரசு அறிவிக்கும் திட்டங்கள் எதுவும் எங்களுக்கு முறையாக கிடைப்பதில்லை. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தும் கொடுத்துள்ளனர். ஆனால், பழங்குடியின மக்களை இந்த அரசும், அதிகாரிகளும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
மக்களின் அடிப்படை தேவையான ரோடு இல்லாததால், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி துாங்கி வரும் நிலையில் உள்ளோம். ரோடு வசதி செய்து தருவதாக அதிகாரிகள் அளந்து சென்று, ஐந்து ஆண்டுகளான நிலையிலும், இது வரை எந்த பணியும் நடைபெறவில்லை.
மத்திய அரசின் தொல்குடி திட்டத்தின் கீழ், கான்கிரீட் வீடுகள் கட்ட அனுமதி வழங்கியுள்ள நிலையில், ரோடு வசதி இல்லாததால், வீடு கட்டுவதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சேலார் மின் விளக்கும் சரியாக எரியவில்லை. இதனால், வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அச்சத்துடன் வாழ்கிறோம்.
வனத்தை விட்டுவெளியேற மாட்டோம் ராஜலட்சுமி, கல்லார்குடி:
ஆனைமலை மலைத்தொடரில் உள்ள செட்டில்மென்ட் பகுதியில் ரோடு, மின்விளக்கு வசதி இல்லை. பஸ் இயக்காவிட்டாலும், ஆம்புலன்ஸ் வந்து செல்லும் அளவுக்காவது ரோடு அமைக்க வேண்டும். ரோடு வசதி இல்லாததால், கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் பெரும் சிரமம் உள்ளது.
அடிப்படை வசதிகள் செய்து கொடுங்கள் என, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டடால், 'நீங்கள் வனத்தை விட்டு வெளியில் வாருங்கள், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருகிறோம்,' என்கின்றனர்.
எங்களை வனத்தில் இருந்து வெளியேற்றுவதில் வனத்துறை அதிகாரிகள் குறியாக உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் நாங்கள் வனத்தை விட்டு வெளியில் வரமாட்டோம். வன உரிமை சட்டப்படி எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.