/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை வீசி விட்டு தப்புவோருக்கு அபராதம்! வீடு தேடி வந்து வசூலிக்க திட்டம்
/
குப்பை வீசி விட்டு தப்புவோருக்கு அபராதம்! வீடு தேடி வந்து வசூலிக்க திட்டம்
குப்பை வீசி விட்டு தப்புவோருக்கு அபராதம்! வீடு தேடி வந்து வசூலிக்க திட்டம்
குப்பை வீசி விட்டு தப்புவோருக்கு அபராதம்! வீடு தேடி வந்து வசூலிக்க திட்டம்
ADDED : அக் 20, 2025 11:01 PM

கோவை:மாநகராட்சி பகுதிகளில், வாகனங்களில் வந்து குப்பை கொட்டி செல்வோருக்கு கடிவாளம் போடும் விதமாக, வாகன பதிவு எண் கொண்டு வீடுகளுக்கே சென்று, அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் மக்கும், மக்காதது, 'இ-வேஸ்ட்' என, தினமும், 1,200 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது.
இக்குப்பை, வெள்ளலுார் கிடங்கில் பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, குப்பை மேலாண்மை பணிகளை, மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்ட, தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குப்பையை வீசிவிட்டு வாகனங்களில் பறந்துவிடுபவர்களால், சுகாதார சீர்கேடு பிரச்னை தொடர்கிறது.
இந்நிலையில், வாகன பதிவு எண்ணை வைத்து, ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை, விதிமீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மாநகராட்சி சுகாதார பிரிவினர் கூறியதாவது:
சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி செல்லும் சுரங்கப்பாதை அருகே, நஞ்சுண்டாபுரம் ரோடு உள்ளிட்ட இடங்களில், குப்பை குவிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
'சிசிடிவி' கேமராக்கள் வைத்திருந்தும், பொது மக்களிடம் அலட்சியம் நிலவுகிறது. சில இடங்களில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் வந்து, 'பல்க் வேஸ்ட்' கொட்டுகின்றனர். இதை தடுக்கும் விதமாக, வாகன பதிவு எண்ணை கொண்டு, அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுக்க உள்ளோம். துாய்மையான மாநகரை உருவாக்குவதற்கு, பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.