/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு சங்க பேரவை அமளியால் ஒத்திவைப்பு! போலி நகை விவகாரத்தில் சர்ச்சை
/
கூட்டுறவு சங்க பேரவை அமளியால் ஒத்திவைப்பு! போலி நகை விவகாரத்தில் சர்ச்சை
கூட்டுறவு சங்க பேரவை அமளியால் ஒத்திவைப்பு! போலி நகை விவகாரத்தில் சர்ச்சை
கூட்டுறவு சங்க பேரவை அமளியால் ஒத்திவைப்பு! போலி நகை விவகாரத்தில் சர்ச்சை
UPDATED : செப் 21, 2025 07:01 AM
ADDED : செப் 21, 2025 06:13 AM

பெ.நா.பாளையம்: துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் நேற்று நடந்த பேரவை கூட்டத்தில், போலி நகைகள் அடகு வைக்கப்பட்டு, ரூ.3.50 கோடி வழங்கப்பட்டது தொடர்பான விவாதம் வந்தது. அதனால் ஏற்பட்ட அமளியால், பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
துடியலுாரில், துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (டியூகாஸ்) செயல்படுகிறது. இச்சங்கத்தில், நகை அடமான பிரிவும் செயல்படுகிறது. 2023ம் ஆண்டு, 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான போலி நகைகள் அடகு வைக்கப்பட்டு, ரொக்கம் பெற்றது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியானது. முதல்கட்ட விசாரணையில், வெவ்வேறு முகவரியில் வசிக்கும், 16 நபர்கள் போலி நகைகளை, 'டியூகாஸ்' நிறுவனத்தில் அடகு வைத்து, பணம் பெற்றது தெரியவந்தது.
இச்சூழலில், 68, 69 மற்றும் 70வது ஆண்டு அறிக்கை பொது பேரவை கூட்டம், சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. மேலாண்மை இயக்குனர் பழனிசாமி தலைமை வகித்தார்.
கூட்டுறவு சங்க உறுப்பினர் காளிச்சாமி பேசுகையில், ''பாரம்பரியமான கூட்டுறவு சேவா ஸ்தாபனத்தில் போலி நகை அடகு வைக்கப்பட்டு, ரொக்கம் பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது. 'டியூகாஸ்' நிறுவனம் எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. அப்பாவி நபர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உண்மையான நபர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரவை கூட்ட தீர்மானங்கள் தொடர்பாக, பதிலளிக்க வேண்டிய அந்தந்த கிளை செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்கள் கூட்டத்தில் பங்கு பெறவில்லை. எனவே, கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார்.
உறுப்பினர் செந்தில்குமார் பேசுகையில், ''இதுபோன்ற சூழ்நிலைகளில் கூட்டுறவு சங்க விதிகளை மட்டும் பின்பற்றாமல், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
'டியூகாஸ்' நிறுவன முன்னாள் துணை தலைவர் செல்வராஜ், துடியலுார் பேரூராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர், பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க ஆட்சேபம் தெரிவித்தனர்.
பலத்த அமளி ஏற்பட்டதால், கூட்டத்தை ஒத்திவைப்பதாக, 'டியூகாஸ்' நிறுவன மேலாண்மை இயக்குனர் பழனிசாமி அறிவித்தார். இவ்விவகாரத்தில், வெளிப் படையான விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி நகையை அடமானம் வைத்தவர்களிடம் இருந்து, அத்தொகையை மீட்க வேண்டுமென, கூட்டுறவு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.