ADDED : செப் 19, 2025 10:23 PM
முதியவர் துாக்கிட்டு தற்கொலை
கோவை அருகே உள்ள வடவள்ளி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை, 76; இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் உமாவுக்கு திருமணமாகி விட்டது. மகனுக்கு 35 வயதை கடந்தும் திருமணம் முடிக்க, பெண் தேடியும் கிடைக்கவில்லை. மன அழுத்தத்தில் இருந்த முதியவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருள் பறிமுதல்
பீளமேடு எஸ்.ஐ.சுபாஷிணி மற்றும் போலீசார், கருப்பராயன்பாளையம், மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்,45, என்பவரை கைதுசெய்தனர். அவரிடம் இருந்து, 75 கிலோ புகையிலை பொருட்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
டிரைவர் மீது தாக்குதல்
கவுண்டம்பாளையம், சேரன் நகரை சே ர்ந்தவர் சிவசங்கர்,56. சாய்பாபா காலனி பாரதி பார்க்கில் உள்ள ஒரு வீட்டில் கார் டிரைவராக உள்ளார். வீட்டுக்கு முன் காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பகுதிக்கு காரில் வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், வீட்டுக்கு முன் நிறுத்தினார். சிவசங்கர் தட்டி கேட்ட போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்நபர், சிவசங்கரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு, காரில் தப்பினார். படுகாயமடைந்த சிவசங்கருக்கு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சா ய்பாபா காலனி போலீசார் விசாரிக்கின்றனர் .
வேஷ்டியில் தீ; முதியவர் பலி
சாய்பாபா காலனி, பாரதி பார்க் 2வது கிராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் சந்தானராமன்,75; வீட்டில் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி, சுவாமி கும்பிட்டார். வேஷ்டியில் கற்பூரம் விழுந்து தீப்பிடித்தது. அலறல் சத்தம் கேட்டு, மனைவி மற்றும் மகன் ஓடி வந்து தீயை அணைத்தனர். அவரது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாய்பாபா காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
குழந்தையுடன் தாய் மாயம்
மஹாராஷ்டிரா மாநிலம், கோப்பாரா பகுதியை சேர்ந்த உலாசிங்,31, மனைவி மாதுரியுடன்,26, கோவை வந்தார். ஈச்சனாரி மேம்பாலம் பகுதியில் டென்ட் அமைத்து தங்கியிருந்து, கூலி வேலை செய்து வருகிறார். ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. மாதுரி, குழந்தையுடன் டவுன்ஹாலுக்குச் செல்வதாக கூறியுள்ளார். திரும்பி வராததால், பல இடங்களில் உலாசிங் தேடியும் கிடைக்கவில்லை. சுந்தராபுரம் போலீசார் தேடுகின்றனர்.
வாலிபர் தற்கொலை
மதுக்கரை, அறிவொளி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்,24; கட்டட தொழிலாளி. திருமணமாகி மனைவி மற்றும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் மீது ஒரு கொலை வழக்கு, திருட்டு வழக்கு உள்ளது. இதன் விசாரணை கோவை கோர்ட்டில் நடந்து வருகிறது. மணிகண்டன் குடும்பத்துடன் சில மாதங்களுக்கு முன், ராமசெட்டிபாளையத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். கட்டட வேலைக்குச் சென்ற இடத்தில், உடன் வேலை செய்பவருடன் மணிகண்டன் சண்டையிட்டதால், வேலையை விட்டு நிறுத்தினர். மன உளைச்சலாகி, மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் புலம்பியுள்ளார். மறுநாளும் மது அருந்தி விட்டு, வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. வீட்டில் தனியாக இருந்தபோது, துாக்கிட்டு தற்கொலை செய்தார். பேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.