/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அறிய பில் கேட்டு வாங்குங்க! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
/
குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அறிய பில் கேட்டு வாங்குங்க! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அறிய பில் கேட்டு வாங்குங்க! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அறிய பில் கேட்டு வாங்குங்க! பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : செப் 23, 2025 11:31 PM

கோவை: குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. நேற்று முதல் அமலாகியுள்ளது. பொதுமக்கள் கடைகளில் மறக்காமல் பில் கேட்டு வாங்கி, ஜி.எஸ்.டி.குறைக்கப்பட்டுள்ளதா என, உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரியினங்களை மத்திய அரசு சீர்திருத்தம் செய்து, 'ஜி.எஸ்.டி. 2.0' அறிமுகம் செய்துள்ளது. மருந்துகளில், 12 சதவீதமாக இருந்த பெரும்பாலானவை 5 சதவீதமாகவும், 18 சதவீதமாக இருந்தவை 5 சதவீதமாகவும், குறைக்கப்பட்டுள்ளன.
முதியவர்கள் உள்ள வீடுகளில், வாடகை, மளிகைக்குச் செலவிடுவது போல், மருந்துக்கும் பட்ஜெட் ஒதுக்கி செலவிட வேண்டியுள்ளது. இச்சூழலில், வரி குறைப்பு பொருளாதார சுமையை குறைத்துள்ளதால், மக்கள் ஆசுவாசம் அடைந்துள்ளனர்.
மருந்து வியாபாரிகள் சங்கத்தின் கோவை மாவட்ட உறுப்பினர்களில் ஒருவரான, ஜெயா பார்மா நிறுவனர் மாணிக்கம் கூறியதாவது:
மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்பு ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய நன்மை. முன்னர் பெரும்பாலான மருந்துகளுக்கு, 12 சதவீத வரி இருந்தது. தற்போது, 12 சதவீத முறையை முற்றிலும் நீக்கி விட்டனர்.
மக்களுக்கு பெரிய ஆசுவாசம் வரியை குறைத்தது மட்டுமின்றி, துல்லியமாக நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது.
மாதந்தோறும் மருந்துகளை ஆயிரக்கணக்கில் வாங்கும் மக்களுக்கு இது, மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.
21ம் தேதி வரை 12 சதவீதமாக இருந்த வரி, தற்போது 5 சதவீதம் என்பது, 50 சதவீதத்துக்கும் மேல் வரி குறைந்துள்ளது என்று கூற வேண்டும். தவிர, புற்றுநோய் உள்ளிட்ட 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கு, வரி பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளது.
மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும், இன்சுலின் மருந்தின் வரி, 5 சதவீதமாக தொடர்கிறது. 90 சதவீத மருந்துகள், 12 சதவீத வரியில் இருந்தன; தற்போது, பெரும்பாலும் 5 சதவீதமாகவும், ஒரு சில பூஜ்ஜியமாகவும் குறைந்து விட்டன.
மீதமுள்ள 10 சதவீத மருந்துகள், சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு, சோப்பு போன்றவை18ல் இருந்து 5 சதவீதத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது; சில பொருட்கள் மட்டும் 18 சதவீதத்தில் தொடர்கின்றன.
விலைக்குறைவு அமல்
குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யுடன் விற்பனை துவங்கி விட்டது. லேபிள்களில்,மாற்றம் செய்யப்பட்ட விலை என்ற ஸ்டிக்கர் ஒட்ட அறிவுறுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் தவிர, வேறு யாராலும் லேபிள்களில் மாற்றம் செய்ய இயலாது. மருந்துகளை திருப்பி அனுப்பி, ஸ்டிக்கர் மாற்றி வருவதற்குள், மருந்து தட்டுப்பாடு உருவாகி விடும்.
இதனால், ஸ்டிக்கர் ஒட்டுவதில் விலக்கு அளித்து, பில் வழங்கும்போது, குறைக்கப்பட்ட விலையை குறிப்பிட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதற்கு ஏற்ப, பில் தகவல் தொகுப்பில் மாற்றம் செய்து விட்டோம். மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கியவர்கள், இனி 3,600 ரூபாய் விலை குறைவாக வாங்குவர்.
மக்கள் பார்த்து வாங்கணும்
சில்லரை விலை கடை களில், எம்.ஆர்.பி., விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு விற்கின்றனரா என, மக்கள் பார்த்து வாங்க வேண்டும்.
வரி குறைப்பு காரணமாக, உற்பத்தியாளர்கள், வினியோகிப்பாளர்கள், மொத்த வியாபாரிகள் சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதுவும் சில மாதங்களில் சரியாகி விடும். புதிய லேபிள்களுடன் மருந்துகள், 30-40 நாட்களில் சந்தைக்கு வந்துவிடும்; அதுவரை மக்கள் பில்லை பார்த்து கவனமாக வாங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
வரி குறைக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை:
கோவை, மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: வரிசீரமைப்பின் தாக்கம் குறித்து கண்காணித்து வருகிறோம். வரி விகிதம் குறைக்கப்பட்ட பொருட்களின் விலையைக் குறைக்காமல், விற்பனை செய்வது குற்றம். இக்குற்றத்தில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள், கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரிக் குறைப்பின் பலன் கட்டாயம் நுகர்வோரைச் சென்றடைய வேண்டும். நுகர்வோர் பொருட்கள் வாங்கும்போது, கட்டாயம் ஜி.எஸ்.டி. பில் கேட்டு வாங்குங்கள். அப்போது அவர்களுக்கு விலையைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை. பில் இல்லாத பரிவர்த்தனைகளை மக்கள் தவிர்க்க வேண்டும். வரி குறைக்கப்பட்ட பொருட்களை, உரிய விலைக்குறைப்புடன் விற்பனை செய்யாதவர்கள், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
பேக்கிங் வரியில் மாற்றம்; வியாபாரிகள் கோரிக்கை
கோவை மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது: ஜி.எஸ்.டி. 2.0 குறைப்பு அடிப்படையில், மளிகை பொருட்களில் பெரிய மாற்றங்கள் இல்லை. பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும் முன் இருந்த, 5 சதவீத வரி தொடர்கிறது. அத்தியாவசிய பொருட்கள் 25 கிலோவுக்கு மேல் பேக் செய்யும் போதும், 25 கிலோவுக்கு கீழ் பிராண்டுபேக் செய்யாமல் வாங்கும் போதும் வரி இல்லை. பன்னீர், நெய், பாதாம், சோயா ஆகிய பொருட்களுக்கு 12 சதவீதமாக இருந்த வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து அத்தியாவசிய பொருட்கள் எந்த அளவில் பேக் செய்யப்பட்டாலும் வரி இல்லை என்ற நிலையை அறிவிக்க வேண்டும். வியாபாரிகள் 25 கிலோ வரை பேக் செய்தால் 5 சதவீத வரி இருப்பதால், 26 கிலோவாக பேக் செய்து விற்பதை காணமுடிகிறது. இதற்கு அரசு விலக்களித்தால் சிறப்பாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.