ADDED : ஜூன் 01, 2026 10:03 PM
அன்னுார்: பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சம்பத்குமார் நேற்று முன்தினம் இரவு அன்னுார் வந்தார். அவரிடம், அன்னுார் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் சென்னியப்பன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை–சத்தி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் கிழக்கு புறவழிச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. கோவை சாலையில் கரியாம்பாளையத்தில் துவங்கி, குமாரபாளையம், சொக்கம்பாளையம், சோமனுார் பிரிவு, இட்டேரி வீதி வழியாக சத்தி சாலையில் இணையும்படி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த ஆணையும் வெளியிட்ட பிறகு திட்டம் முடங்கி கிடக்கிறது. அன்னுாரில் போக்குவரத்து நெரிசல் தீர கிழக்கு புறவழிச்சாலை அவசியம். முடங்கிய இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மனுவை பெற்ற அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
