/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலம்... கபளீகரம்:ரெட்டேரி உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலம்... கபளீகரம்:ரெட்டேரி உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல்
ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலம்... கபளீகரம்:ரெட்டேரி உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல்
ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலம்... கபளீகரம்:ரெட்டேரி உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : செப் 16, 2025 01:23 AM

சென்னை;மாதவரம், வடப்பெரும்பாக்கத்தில், சென்ன கேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், மண் கொட்டி ஆக்கிரமிப்பு கும்பலால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், ரெட்டேரி உபரி நீர் வெளியேற முடியாமல், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாதவரம் ரெட்டேரியை, சென்னை குடிநீர் ஆதாரமாக்கும் வகையில், 50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் காரணமாக ஏரியில், 0.50 டி.எம்.சி., நீரை சேமித்து, சென்னையின் 15 நாள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
ஆனால், மழைக் காலத்தில் ரெட்டேரி நிரம்பும்போது, அதில் உள்ள நீரை வெளியேற்ற கால்வாய் வசதி இல்லை.
இதனால், வெள்ளநீர் தானாக வெளியேறி, அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., நகர், வெஜிடேரியன் வில்லேஜ் வழியாக காலி நிலங்களில் பாய்ந்து, வடப்பெரும்பாக்கம் மாதவரம் நெடுஞ் சாலையை வந்தடையும்.
முடியாத நிலை இந்த இடத்தில் சாலையின் இரண்டு புறங்களிலும், ஜார்ஜ்டவுனில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது.
சாலையை கடந்து வரும் வெள்ள உபரிநீர், கோவில் நிலத்தின் ஒரு பகுதியில் குளம்போல தேங்கி நிற்கும். இதனால், மாதவரம் நெடுஞ்சாலையில் போக்கு வரத்து முடங்கும்.
மழை குறையும்போது, படிப்படியாக வெள்ளம் வடிந்து, சாலையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும். காலம் காலமாக இது நடந்து வருகிறது.
இப்பிரச்னையை தவிர்க்க ரெட்டேரிக்கு உபரிநீர் கால்வாய் அமைக்க நீர்வளத்துறை திட்டமிட்டது. அரசு நிதி ஒதுக்காததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ரெட்டேரி வெள்ளநீர் வெளியேறும் பகுதியில் உள்ள, 300 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலத்தை, சிலர் மண் கொட்டி ஆக்கிரமித்து வருகின்றனர்.
இதனால், குளம்போல் இருந்த இடத்தில், திடீரென மணல் மேடு உருவாகியுள்ளது. சிறுபாலத்தில் இருந்து மட்டுமின்றி, சாலை வழியாகவும் அந்த இடத்தில் நீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
குழப்பம் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கவுள்ள நிலையில், ரெட்டேரி நிரம்பும் பட்சத்தில், அதில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறக்கப்படும்.
அவ்வாறு திறக்கப்படும் நீர் வெளியேறி வழிந்தோட முடியாத அளவிற்கு, சென்ன கேசவ பெருமாள் கோவில் நிலத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது.
இதனால், ரெட்டேரி நீர், பின்பகுதி வழியாக சென்று, எம்.ஜி.ஆர்.,நகர், காவாங்கரை, சக்திவேல் நகர், புழல் ஆகிய பகுதிகளை மூழ்கடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், சென்னை விரிவாக்கப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.
இந்த ஆக்கிரமிப்பு, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிந்து நடக்கிறதா; தெரியாமல் நடக்கிறதா என்ற குழப்பம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை இணைந்து விரைந்து தீர்வு காண வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.