/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்; நவ., 23ம் தேதி வரை சிறப்பிக்க சிறப்பு ஏற்பாடு
/
சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்; நவ., 23ம் தேதி வரை சிறப்பிக்க சிறப்பு ஏற்பாடு
சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்; நவ., 23ம் தேதி வரை சிறப்பிக்க சிறப்பு ஏற்பாடு
சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்; நவ., 23ம் தேதி வரை சிறப்பிக்க சிறப்பு ஏற்பாடு
ADDED : செப் 15, 2025 01:18 AM

சென்னை; ''ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில், நவ., 23ம் தேதி வரை, மரக்கன்று நடுதல், ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்கள், கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்,'' என, ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் தேசிய தலைவர் நிமிஷ் பாண்டியா கூறினார்.
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, 'அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய்' என்ற சாய்பாபாவின் அறிவுரைக்கு ஏற்ப, நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்க, ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதற்கான அழைப்பிதழ் வெளியீடு, சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஸ்ரீசத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது.
நுாற்றாண்டு விழா குறித்து, ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்பின் தேசிய தலைவர் நிமிஷ் பாண்டியா கூறியதாவது:
சாய் பாபாவின் வழியில், கல்வி, மருத்துவ சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு அவரின் 100வது பிறந்த நாள் என்பதால், ஏப்., 24 முதல் நவ., 23ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன
மரக்கன்று நடுதல், ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்கள், கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
ஒரு கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, தமிழகத்தில் 25,000 மற்றும் நாடு முழுதும் 40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் 1,000 பேருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. நுாற்றாண்டு கொண்டாட்டம் வாயிலாக, மேலும் பல திட்டங்களை செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப் பின் தமிழக தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:
நுாற்றாண்டு விழாவின் இறுதி நாளான, நவ., 23ல், புட்டபத்தி, பிரசாந்தி நிலையத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட உள்ளனர். சென்னை, ஆர்.ஏ.புரம் சுந்தரம் வளாகத்தில், நவ., 13 முதல் 23ம் தேதி வரை, தினமும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
காலை பூஜை, அர்ச்சனை; மாலையில் பாட்டு கச்சேரி, பஜனை நடைபெறும். நவ., 16 மாலை, பகவானின் பிரேம ரதம், மயிலாப்பூரில் துவங்கி சுந்தரம் வளாகத்தில் வலம் வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் தேசிய சேவை ஒருங்கிணைப்பாளர் கோட்டீஸ்வரராவ், தென்னிந்திய தலைவர் முகுந்தன், தேசிய மருத்துவ சேவை ஒருங்கிணைப்பாளர் ராம்மனோகர்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.